சிங்கப்பெருமாள் கோவில்: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவில் அருகில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல லட்சம் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கும், ரயில்வே கேட்டை கடப்பதற்கும் தைலாவரம் முதல் காட்டாங்குளத்தூர், சாமியார் கேட், பேரமனூர், மகேந்திரா சிட்டி போன்ற பகுதிகளில் உள்ள ரயில்வே கேட்டை கடந்துதான் வர முடிகிறது, அதனால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
10 நிமிடம் 20 நிமிடத்துக்கு மேலும், அரை மணி நேரத்துக்கும் குறைவாக இந்த பகுதிகளில் உள்ள கேட் அடைக்கப்படுவதால், அரசு பொதுத்துறை நிறுவனத்தில் வேலைக்கு செல்லும் ஊழியர்கள் அல்லது தனியார் துறையில் வேலைக்கு செல்லும் ஊழியர்கள், கல்லூரி, மற்றும் மாணவர்கள், மாணவிகள் அதேபோல வயதானவர்கள் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பொதுமக்கள் அனைவருக்கும் இந்த ரயில்வே கேட் மூடியிருக்கும் நேரத்தில் மிகுந்த சிரமம் இருக்கிறது.
மேலும், நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அரை மணி நேரம் தாமதமாக செல்லக்கூடிய நிலைமை இருக்கிறது. சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அவசர ஊர்தியில் செல்பவர்கள் கேட்டை திறந்தால்தான் நெடுஞ்சாலைக்கு வரக்கூடிய சூழல் இருக்கிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. பொதுமக்கள் பயன்பாட்டை கருதி சாலையை கடப்பதற்கு அந்த ரயில்வே கேட்டை அப்புறப்படுத்தி மேம்பாலம் அல்லது சுரங்க பாதை அமைத்து பொது மக்களுக்கு வழி அமைத்து தர வேண்டும்.
மேலும், பொதுமக்கள் ஜி.எஸ்.டி சாலையை (NH 45) கடப்பதற்கு மேம்பாலம் அமைத்து தரவும், ரயில்வே நிலையம் அருகில் நகரும் படிக்கட்டு அமைப்பதற்கும், ஜிஎஸ்டி சாலையை கடக்க, 8 வழி சாலையாக மாறிய பின்பு விபத்துக்களை தவிர்க்க மற்றும் சிக்னல் தானியங்கி முறையில் இயங்குமாறு அமைத்து தர வேண்டும், ரயில் நிலையங்கள் அருகில் நகரும் படிக்கட்டும், மின்தூக்கியும், அமைத்து தர வேண்டும், மேலும், பொது மக்கள் இரவு நேரங்களில் ரயில்வே நிலையத்திலிருந்து ரயிலை விட்டு பாதுகாப்புடன் வீடு செல்ல ரயில்வே காவலர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும்.
ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் சிங்கப்பெருமாள் கோவிலில் கட்டி முடிக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவமனை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிங்கப்பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் கிளைச் செயலாளர் எம்.வெங்கடேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம் ஒன்றிய செயலாளர் கே.சேஷாத்திரி மாவட்ட குழு உறுப்பினர்கள் வி.தமிழரசி, எஸ்.குணசேகரன், பகுதி குழு உறுப்பினர்கள் பாபு, சம்பத், செல்வராஜ், நடராஜன், மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.