சிவகாசி அருகே குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவர் கைது

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் பெரியார் காலனியில் குடியிருப்பு பகுதியில் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்தவரை கைது செய்த போலீஸார், 60 கிலோ மணி மருந்தை பறிமுதல் செய்தனர்.

சிவகாசி அருகே திருத்தங்கல் பெரியார் காலனியை சேர்ந்தவர் பால்பாண்டி (48). இவர் அதே பகுதியில் உரிமம் பெற்று அட்டை தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். பால்பாண்டி அட்டை கம்பெனியில் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

திருத்தங்கல் போலீஸார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போது, தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பேன்சி ரக்க பட்டாசுகளை உற்பத்தி செய்தது தெரிய வந்தது. மேலும் அங்கு 60 கிலோவுக்கு மேல் மணி மருந்தை ஆபத்தான முறையில் திறந்த வெளியில் காய வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து பால்பாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் விருதுநகர் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்: டிஆர்ஓ மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 15 கிலோ மணி மருந்து கையாள்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் இடத்தில் 60 கிலோ மணி மருந்து இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு வெடிபொருள் பால்பாண்டிக்கு எங்கிருந்து கிடைத்தது என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். கைது செய்யப்பட்ட பால்பாண்டி மீது ஏற்கனவே சட்டவிரோத பட்டாசு உற்பத்தி குறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளது, என தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE