ஆழியாறு கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்

By எஸ்.கோபு

பொள்ளாச்சி: ஆனைமலை அடுத்த ஆழியாறு கவியருவியில் இன்று (ஜுலை 14) திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை அவசர அவசரமாக வெளியேற்றினர். மேலும் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தற்காலிக தடை விதித்தனர்.

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான ஆழியாறு அணை, கவியருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் இந்த அருவி அமைந்துள்ளது. வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் பெய்யும் மழை நீரை ஆதாரமாகக் கொண்டுள்ள அருவியில் சுமார் 80 அடி உயரத்தில் இருந்து மிதமான வேகத்தில் தண்ணீர் கொட்டுவதால், விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று வார விடுமுறை நாள் என்பதால் காலை 7 மணி முதல் சுற்றுலாப் பயணிகள் ஆழியாறு கவியருவியில் குவிய தொடங்கினர். அருவியில் நீர்வரத்து மிதமாக இருந்ததால் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை அருவிப்பகுதிக்கு செல்ல அனுமதி அளித்தனர். சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென அருவியில் தண்ணீரின் வேகமும் அளவு அதிகரித்தது, நேரம் செல்லச் செல்ல அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அங்கு கண்காணிப்புப் பணியில் இருந்த வனத்துறையினர், பாதுகாப்பு கருதி அருவியில் குளித்துக் கொண்டிருந்த 30-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை அவசரமாக வெளியேற்றினர். பின்னர் அருவிக்கு செல்லும் பாதையின் நுழைவாயில் கதவு மூடப்பட்டது. கவியருவியில் நீர்வரத்து சீராகும் வரை சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். கவியருவி தற்காலிகமாக மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE