சென்னை: திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் பட்டியலின மக்களுக்கு எதிராக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்கொடுமை சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து நடந்துவரும் சம்பவங்களால் திமுக அரசு தமிழக மக்களின் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம், போதைப் பொருள் புழக்கம், தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை என தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரித்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்துவரும் கொடூரத் தாக்குதல், தமிழகத்தை தாண்டி, தேசிய பட்டியலின ஆணையத்தின் விசாரணையை எட்டியுள்ளது.
சாதி வேறுபாடு இல்லாத மயானங்களை கொண்டுள்ள கிராமங்களில், மாவட்டத்துக்கு ஒரு கிராமம் என 37 முன்மாதிரி கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்த தலா ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை மாற்றிவிட்டதாக கூறும் திமுகவினருக்கு இதனை அறிவிக்க வெட்கமாக இல்லையா, இறந்தவரின் உடலை சுமந்து கொண்டு மணிக்கணக்காக செய்வதறியாமல் திகைத்துப்போய் தவிக்கும் பட்டியலின மக்களின் கண்ணீர் கதைகள், தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. முதல்வர் ஸ்டாலினுக்கு இவையெல்லாம் தெரியவில்லை என்றால், நானேஅவரை அழைத்துச் சென்று இந்தஅவலங்களைக் காட்டத் தயாராகஇருக்கிறேன். தமிழகத்தில் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கான விடுதிகள் என்னகதியில் இருக்கிறது என்பதை மு.க.ஸ்டாலின் அறிவாரா?
» டிஎன்பிஎல் தொடர்: திருப்பூர் அணி வெற்றி
» ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் விளாசல்: டி20 தொடரை வென்றது இந்திய அணி
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2021-ம் ஆண்டுக்கு பிறகு 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக, ஆண்டு ஒன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தமிழகத்தில் 22 கிராம ஊராட்சி அலுவலகங்களில், பட்டியலினத் தலைவர்கள் அமர நாற்காலிகூட வழங்கப்படவில்லை. இவை எல்லாம், முதல்வருக்கு தெரியுமா, இந்த அவலத்தை பெருமையாக வெளியே சொல்ல இந்த அரசுக்கு எந்த தகுதியும் இல்லை.