வழக்குக்காக பணம் கேட்டு பேரம்: குனியமுத்தூர் காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

By டி.ஜி.ரகுபதி

கோவை: வழக்கு தொடர்பாக பணம் கேட்டு பேரம் பேசிய விவகாரத்தில் உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள குனியமுத்தூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மணிகண்டன். அதே காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அகஸ்டின். ஒரு புகார் தொடர்பாக, வழக்குப் பதிந்து மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க புகாரில் தொடர்புடைய ஒருவரிடம், சிறப்பு உதவி ஆய்வாளர் அகஸ்டின் அண்மையில் பேரம் பேசியுள்ளார். அது தொடர்பான ஆடியோ மூன்று தினங்களுக்கு முன்னர் வெளியானது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்கும்படி தொடர்புடைய உயரதிகாரிகளுக்கு மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில், உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில் சிறப்பு உதவி ஆய்வாளர் அகஸ்டின் பணம் கேட்டு பேரம் பேசியதும், அதற்கு உதவி ஆய்வாளர் மணிகண்டன் உடந்தையாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பான விசாரணை அறிக்கையை காவல் ஆணையரிடம் சமர்ப்பித்தனர். இதைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் மணிகண்டன், சிறப்பு உதவி ஆய்வாளர் அகஸ்டின் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE