அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

By KU BUREAU

சென்னை: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் துரைமுருகன், தற்போது தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ளார், அவருக்கு வயது 85. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை பெற்றுள்ள நிலையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர் துரைமுருகன் இன்று அறிவாலயத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவுக்கு அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து அவரது உடல் நிலையை கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE