விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி முகத்தில் உள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
விக்கிரவாண்டி சட்டப் பேரவை இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்தலை அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் புறக்கணித்துவிட்ட நிலையில் மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், பிரதானமாக திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகிய 3 கட்சிகளிடையேதான் போட்டி நிலவியது.
இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை துவங்கியதிலிருந்தே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வருகிறார். நண்பகல் 12 மணி நிலவரப்படி 12 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுகவின் அன்னியூர் சிவா 76,693 வாக்குகளும், பாமக வேட்பாளர் சி.அன்புமணி 33,421 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அபிநயா 5918 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி முகத்தில் உள்ள தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்த திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், வெற்றி கொண்டாட்டத்தில் இருந்த தொண்டர்களுக்கு லட்டுகளை வழங்கி, தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
» நடிகர் பிரஷாந்தின் ‘அந்தகன்’ பட டிரெய்லர் வெளியானது!
» அமைச்சுப் பணியாளர்களுக்கு ஜூலை 16 முதல் இடமாறுதல் கலந்தாய்வு: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு!