அமைச்சுப் பணியாளர்களுக்கு ஜூலை 16 முதல் இடமாறுதல் கலந்தாய்வு: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு!

By சி.பிரதாப்

பள்ளிக்கல்வித் துறையில் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை 16ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இன்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 'பள்ளிக் கல்வித் துறையில் 30.6.2024 அன்றைய நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே பணியிடத்தில் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், சுருக்கெழுத்து தட்டச்சர்கள், தட்டச்சர்கள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடத்த ஏதுவாக அவர்களது விவரங்கள், விருப்ப மாறுதல் விண்ணப்பத்தை எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்தப் பணியாளர்கள் மாறுதல், விருப்ப மாறுதல், மனமொத்த மாறுதல் மாவட்டத்துக்குள் வழங்குவதற்கான கலந்தாய்வு ‘கூகுள் மீட்' காணொலி செயலி மூலமாக நடைபெறவுள்ளது. அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 16, 18, 19 ஆகிய நாள்களில் முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) ஆகியோரால் கலந்தாய்வு நடத்தப்படும்.

மாவட்டத்திற்குள் கூகுள் மீட் மூலம் கலந்தாய்வு நடத்த ஏதுவாக அதற்கான வலைதளத்தில் உருவாக்கி சார்ந்த பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். மூன்றாண்டுகள் பணி முடித்த பணியாளர்கள் கட்டாய மாறுதலுக்கு தகுதியுடையவராய் இருந்தாலும் (30.6.2024 நிலவரப்படி) ஓய்வு பெற ஓராண்டு இருக்கும் பணியாளர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளத் தேவையில்லை. கலந்தாய்வுக்குப் பின்னர் காலியிட விவரங்களை பதவி வாரியாக பட்டியலிட்டு பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE