தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைப் பெற தமிழக முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஓ.பி.எஸ். வலியுறுத்தல்!

By KU BUREAU

சென்னை: காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவின்படி, காவிரியில் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை பெற, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடகா முதல்வர் சித்தராமையாவிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "உச்சநீதிமன்ற தீர்ப்பினை முற்றிலும் அவமதிக்கும் வகையில் கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. உபரி நீர் மட்டுமே திறக்கப்படும், உரிய நீர் திறந்துவிடப்படாது என்று கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் குறைந்தபட்சம் 90 டிஎம்சி தண்ணீர் இருந்தால், ஜூன் 12ம் தேதி, தமிழக டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் இந்த ஆண்டு நீர் இருப்பு வெறும் 13 டிஎம்சி மட்டுமே உள்ளது. இதனால் தண்ணீர் திறக்கப்படாததால், டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீர் விவசாயம் மட்டுமே நடைபெற்று வருகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப் படி, ஜூன் மாதம் 9.19 டிஎம்சி தண்ணீரும், ஜூலை மாதம் 31.24 டிஎம்சி தண்ணீரும் கர்நாடகா அரசால் திறந்துவிடப்பட்டிருக்க வேண்டும்.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் ஜூலை 31ம் தேதி வரை தினமும் ஒரு டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா முதலமைச்சர் ஒரு டிஎம்சி தண்ணீர் கூட திறக்க முடியாது என தெரிவித்துள்ளார். கர்நாடகா அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்துவிட வேண்டிய கடமையும், பொறுப்பும் அம்மாநில அரசுக்கு உள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, தமிழ்நாட்டிற்குரிய நீரை பெற வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது. இதுகுறித்து கர்நாடகா அரசிடம் பேசவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ திமுக (அரசு) முன்வராதது கடும் கண்டனத்துக்குரியது. உரிமைக்கு குரல் கொடுக்காமல் மவுனம் சாதிப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.

தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர், கர்நாடகா முதல்வருடன் உடனடியாக பேசி, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நடைமுறைப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் வலியுறுத்துகிறேன்" இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE