உதகையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் - 6 பேருக்கு மறுவாழ்வு!

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: உதகையில் மூளைச்சாவு அடைந்த மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகை சென்மேரிஸ்கில் பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருடைய மனைவி எமிலி (62). இவர்களுக்கு பிரான்சிஸ் கில்பர்ட், கென்னி நெல்சன், கிளமெண்ட் என 3 மகன்களும், ரெஜினா மேரி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டில் சுயநினைவு இல்லாமல் எமிலி மயங்கி விட்டார். இதைத்தொடர்ந்து உறவினர்கள் அவரை உதகையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் எமிலிக்கு ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்பட்டது. எனினும் மருத்துவர்கள் இயன்றவரை சிகிச்சை அளித்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் மூளையில் ரத்தம் உறைந்து, எமிலி மூளைச்சாவு அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் எமிலியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். இதன்படி எமிலியின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவற்றை தானமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி தலைமையில் மருத்துவர்கள் ரவிசங்கர், வினோத் குமார், மணிகண்டன், கார்த்திக் ஆகியோர் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, உறுப்புகளை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் கண்கள் கோவையில் உள்ள சங்கரா கண் மருத்துவமனைக்கும், கல்லீரல் ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கும் சிறுநீரகங்கள் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டன. இதன்மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக மூதாட்டி உடல் உறுப்பு தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாயை இழந்து துயரத்தில் உள்ள நிலையிலும், எமிலியின் மகன்கள் மற்றும் உறவினர்கள் சமுதாயத்திற்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என கருதி உடல் உறுப்புகளை தானம் செய்ததற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். எமிலியின் குடும்பத்தினருக்கும், இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த மருத்துவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் மு.அருணா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இதன்படி எமிலியின் இறுதி சடங்கில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE