காவிரி நீரை பெறுவதற்காக கர்நாடகா அரசை எதிர்த்து போராடவும் தயார்: செல்வப்பெருந்தகை தகவல்

By KU BUREAU

கிருஷ்ணகிரி: காவிரி நீருக்காக, கர்நாடகா அரசைஎதிர்த்து காந்திய வழியில், தமிழக காங்கிரஸ் போராடத் தயார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லுகுறிக்கி கிராமத்தில் நடந்த காலபைரவர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்ட செல்வப்பெருந்தகை, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தனி நபர்களை தாக்கிப் பேசுவது பாஜகவினருக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான். குறிப்பாக, வட மாநிலங்களில் தனி நபர்களைத் தாக்கிப் பேசுவது அதிக அளவில் நடைபெறும், இந்தப் பழக்கத்தை தற்போது தமிழகத்திலும் தொடங்கி உள்ளனர். தனிநபர்களை தாக்கிப் பேசுவது மட்டுமின்றி, ஆட்களை வைத்து தாக்கவும் செய்வார்கள். எனவே, பாஜகவினர் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார் கருணாநிதி. அதேபோல, காமராஜரை தொடர்ந்து கருணாநிதிதான், பொன் எழுத்துகளால் எழுதக் கூடிய திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். குஜராத்தில் இருந்து தமிழகத்திற்கு போதைப் பொருட்கள் கடத்தி வருவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். தமிழக அரசும் போதை பொருட்கள் நடமாட்டத்தை, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை ஒப்பிடும்போது, கடந்த 3 ஆண்டுகால திமுகஅரசில் குற்றங்கள் குறைவாகத்தான் நடந்துள்ளது. எனினும், தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உளவுத் துறையில் ஆய்வாளருக்குப் பதிலாக, காவல் துணைக் கண்காணிப்பாளரை நியமிக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஐ.ஜி. அந்துஸ்து உள்ள அலுவலர்களை நியமித்து, உளவுப் பிரிவை வலிமைப்படுத்த வேண்டும்.

தமிழகத்துக்கு காவிரி நீரைப் பெற்றுத் தரும் வகையில், கர்நாடகஅரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் காந்திய வழியில் போராட்டம்தயாராக உள்ளது. அண்ணாமலைஎன் மீது தொடுத்த விமர்சனங்களால், காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியைவலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார். மாவட்ட துணைத் தலைவர் சேகர், ஆடிட்டர் வடிவேல், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் துரைசாமி உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE