பழனி நகரம் முழுவதும் கடைகள் அடைப்பு: தேவஸ்தானத்தை கண்டித்து நகராட்சி சார்பில் போராட்டம்!

By KU BUREAU

திண்டுக்கல்: பழனியில் தேவஸ்தான நிர்வாகத்தை கண்டித்து நகராட்சி சார்பில் விடுக்கப்பட்டிருந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட பழனியில் முருகனின் 3வது படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர். கோயில் அடிவாரத்தை சுற்றி உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புக் கடைகள் அதிகமாக இருப்பதாக திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது கிரிவலப் பாதையில் அனைத்து வகை வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு, கடைகள், வீடுகள் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் தேவஸ்தான நிர்வாகத்தின் நடவடிக்கை காரணமாக சிறு, குறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கோயில் நிர்வாகம் நகராட்சி நடவடிக்கைகளில் தலையிடுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக பழனி நகராட்சி கூட்டங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1948ம் ஆண்டு நகராட்சிக்கு சொந்தமான கிரிவலப் பாதையை பராமரிப்பு பணிகளுக்காக தேவஸ்தானம் வசம் வழங்கப்பட்டதாகவும், 1974ம் ஆண்டு கிரிவலப் பாதையில் கோயில் நிர்வாகம் அடைப்புகள் ஏற்படுத்தக் கூடாது என்ற அரசாணை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி கிரிவலப் பாதையில் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை எனவும், இதனால் விவசாயிகள் வேளாண் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் சிறு, குறு வியாபாரிகள் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி பழனி நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் 33 வார்டு உறுப்பினர்களும் அரசியல் கட்சி வித்தியாசம் இன்றி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று முழு கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன்படி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பழனி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு வணிகர்கள் சார்பாக உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதை ஒட்டி நகரம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE