‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ முதல் அம்பானி இல்லத் திருமண விழா வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

ஜூன் 25 இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ : நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25-ம் தேதி, இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ ஆக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஜூன் 25, 1975 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சர்வாதிகார மனநிலையின் மோசமான வெளிப்பாடாக, நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார். இதன்மூலம், அவர் நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார். எந்தத் தவறும் செய்யாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறை கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டனர். ஊடகங்களின் குரல் அடக்கப்பட்டது.

அரசியலமைப்பு படுகொலை தினம் அனுசரிக்கப்படுவது, ஒவ்வொரு இந்தியரிடமும் தனிமனித சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும் உதவும். இதனால் காங்கிரஸ் போன்ற சர்வாதிகார சக்திகள், அந்த கொடூரங்களை மீண்டும் செய்வதைத் தடுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு படுகொலை தினம்: பிரதமர் vs காங். - இந்திய அரசியலமைப்புச் சட்டம் காலில் போட்டு மிதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ நினைவுபடுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். அதேவேளையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ், "மனிதர் மூலம் பிறப்பெடுக்காத பிரதமர் மேற்கொள்ளும் தலைப்புச் செய்திக்கான மற்றுமொரு பாசாங்குத்தனமான முயற்சியே இது. அறிவிக்கப்படாத 10 ஆண்டுகளாக அவரநிலையை பிறப்பித்தவர் அவர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், அதன் கொள்கைகள், மதிப்புகள் மற்றும் நிறுவனங்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்திய பிரதமர் இவர். இந்திய அரசியல் சாசனம் மனுஸ்மிருதியிலிருந்து உத்வேகம் பெறவில்லை என்பதால் அதனை நிராகரிக்கிறோம் என கூறியவர்களின் கருத்தியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். மனிதர் மூலம் பிறப்பெடுக்காத பிரதமருக்கு, டெமாக்ரசி என்பது டெமோ-குர்சி மட்டுமே" என்று விமர்சித்துள்ளார்.

மது விலக்கு சட்டத்தில் திருத்தம்: ஆளுநர் ஒப்புதல்: தமிழகத்தில் கள்ளச் சாராய மரணம் ஏற்பட்டால், அதை தயாரித்து விற்பவருக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனை, ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் மதுவிலக்கு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

நியோ மேக்ஸ் மோசடி வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு: நியோ மேக்ஸ் மோசடி வழக்கின் விசாரணையை 15 மாதத்தில் முடித்து சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

.ஐகோர்ட் தலைமை நீதிபதியாகிறார் கே.ஆர்.ஸ்ரீராம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.வி.கங்காபுர்வாலா கடந்த மே மாதம் பணிஓய்வு பெற்றார். அதையடுத்து மூத்த நீதிபதியான ஆர்.மகாதேவன், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நீதிபதி ஆர்.மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்துள்ளது. அதேபோல சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்து வரும் கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராமை நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதியன்று மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட கே.ஆர்.ஸ்ரீராம் தற்போது மூன்றாவது மூத்த நீதிபதியாக பதவி வகித்து வருகிறார். அடித்தட்டு மக்களுக்கு சேவையாற்றுவதில் அதீத அக்கறை கொண்ட நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், தர்மிஸ்தா மித்ரன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியாகவும் செயல்பட்டுள்ளார். சிறந்த கோல்ப் விளையாட்டு வீரரான இவர், இந்தியா மட்டுமின்றி சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - வாக்கு எண்ணிக்கை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. இதையொட்டி விழுப்புரம் எஸ்பி-யான தீபக் ஸ்வாட்ச் தலைமையில் 1,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 20 சுற்றுகளாக எண்ணப்பட்டு மதியத்துக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.சீமானுக்கு அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை: “திமுக தொண்டர்களை பொறுத்தவரையிலும், தற்போதைய தலைவரின் கண் அசைவுக்காகதான் காத்திருக்கிறார்கள். பொறுமையாக இருக்கிறார்கள். ஆளுங்கட்சியில் இருக்கிறோம். முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்புடன் இருக்கிறார். ஆகவே, பொறுமையாக இருக்கிறோம். எனவே, சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும். அரசியல் அரைவேக்காடுத்தனமாக பேசக் கூடாது,” என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.

டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத் துறை தன்னை கைது செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பின்போது நீதிபதிகள், “வெறும் விசாரணைக்காக மட்டும் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ய அனுமதிக்க மாட்டோம். அதனை நாங்கள் நம்புகிறோம். கேஜ்ரிவால் ஒரு மாநிலத்தின் முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக உள்ளார். அவருக்கென்று சில உரிமைகள் உள்ளன. அப்படிப்பட்டவர் 90 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கிறார். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குகிறோம்.” என்று தெரிவித்தனர்.

இதனிடையே, பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருப்பதற்கு ஆம் ஆத்மி கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. இதே ஊழல் தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கால் கேஜ்ரிவால் தொடர்ந்து சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாஜக மீது திருமாவளவன் சந்தேகம்: சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, திட்டமிட்டவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என சில அரசியல் கட்சிகள், சில அமைப்புகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜகவுக்கு இந்த செயல்திட்டம் இருப்பதை அறிய முடிகிறது.

ஆருத்ரா கோல்டு நிறுவனத்துடன் பாஜகவை சேர்ந்த சிலருக்கு உள்ள தொடர்பு குறித்து கடந்த சில மாதங்களாக விவாதிக்கப்படுவதை பார்க்கிறோம். ஆருத்ரா கோல்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பாஜகவில் பொறுப்பிலேயே இருக்கிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா கோல்டு விவகாரமும் பேசப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் பாஜக வலிந்து தலையிட்டு சிபிஐ விசாரணை கோருகிறது. அவர்களின் அரசியல் செயல்திட்டம் என்பது திமுக அரசுக்கு எதிராக இங்கு பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும், ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது” என்றார்.

அம்பானி இல்லத் திருமண விழா: மும்பையில் பிரமாண்டமாக நடைபெறும் அம்பானி இல்லத் திருமண விழாவில் டபிள்யூடபிள்யூஇ (WWE) மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா கலந்துகொண்டுள்ளார். நடிகர்கள் ரஜினிகாந்த், யஷ், மகேஷ் பாபு உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரபலங்களின் வருகையையொட்டி மும்பையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், திருமணம் நடைபெற உள்ள இடத்தையொட்டிய பகுதிகளில் இருக்கும் ஐடி நிறுவனங்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் வசதி வழங்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE