தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசு - முதல்வர் ஸ்டாலினை சாடும் எடப்பாடி பழனிசாமி

By KU BUREAU

சென்னை: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நாளொன்றுக்கு ஒரு டி.எம்.சி தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை ஏற்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் நாளொன்றுக்கு ஒரு டி.எம்.சி வீதம் ஜூலை 31 வரை தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை ஏற்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. காவிரி ஆறு பாயும் மாநிலங்களின் எண்ணங்களை கருத்திற்கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை கர்நாடக அரசு ஏற்காமல் முரண்டு பிடிப்பது ஏற்கத்தக்கதல்ல.

விளம்பர போட்டோ ஷூட்டில் மட்டுமே கவனம் செலுத்தும் திமுக முதல்வர், காங்கிரசின் தயவிற்காக தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமையை விட்டுக்கொடுப்பது அவரின் தொடர் செயலற்றத்தன்மை மூலம் தெளிவாகத் தெரிகிறது. மேடையில் மட்டும் மாநில உரிமை பற்றி வாய் கிழிய பேசும் திமுக அரசின் முதல்வர் தன்னுடைய செயலற்ற தன்மையால், தமிழக மக்களின் வாழ்வோடு விளையாடி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

டெல்டா விவசாயிகள் நலனைக் கருத்திற்கொண்டு உடனடியாக காவிரி விவகாரத்தில் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு உரித்தான நீரைப் பெறுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE