விழுப்புரம் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கும் டால்ஃபின்கள்: மீனவர்கள் கவலை

By எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்: மரக்காணம் அருகே இறந்த நிலையில் டால்ஃபின்கள் கரை ஒதுங்கி வரும் நிலையில், மீன்வளத்துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடல்வாழ் உயிரினங்களில் மிகவும் அறிவார்ந்த உயிரினமாக கருதப்படுவது டால்ஃபின்கள். கடலுக்கு செல்லும் மீனவர்கள் கடலில் தவறி விழுந்தால், அவர்களுக்கு டால்ஃபின்கள் உதவுவது வாடிக்கையான ஒன்று. அதே போல் உலகின் பல்வேறு கடற்கரைகளில் குளிக்கும் மக்களை சுறாமீன்கள் தாக்க வந்தால், அவர்களை டால்ஃபின்கள் காப்பாற்றும் சம்பவங்களும் ஏராளமாக நடைபெற்றுள்ளன.

தமிழக கடற்கரையோர பகுதிகளில் அவ்வப்போது டால்ஃபின்கள் தென்படுவது வழக்கம். சில நேரங்களில் உடல்நலக்குறைவால் கரையோரம் வரும் டால்ஃபின்களை மீனவர்கள் கடலுக்குள் பத்திரமாக அனுப்புகின்றனர். ஆழ்கடலில் மீன்பிடிக்கும் போது டால்ஃபின்கள் வலையில் சிக்கினால், அவற்றை பத்திரமாக மீண்டும் கடலுக்குள் விடுவதை மீனவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கடலில் அதிக அளவில் டால்ஃபின் மீன்கள் கூட்டம் கூட்டமாக அடிக்கடி செல்வதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 50 கிலோ எடை உள்ள ஒரு டால்ஃபின் மரக்காணம் தீர்த்தவாரி கடல் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இந்த டால்ஃபின் உடல் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இதுபோல் அடிக்கடி இப்பகுதியில் கடல் ஆமைகள், டால்ஃபின் போன்றவை இறந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன.

எதன் காரணமாக இந்தப் பகுதியில் மட்டும் அவை கரை ஒதுங்குகின்றன? இதற்கு என்ன காரணம்? என்பதை மீன்வளத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE