ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியா தவறான முடிவு எடுக்கிறது: பழ.நெடுமாறன் கருத்து

By KU BUREAU

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் 15-ம் ஆண்டு தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் பேசியதாவது: பாலஸ்தீனம் - இஸ்ரேல் போரில் 30 ஆயிரம் பேர் உயிரிழந்ததால், உலக நாடுகள் போரை நிறுத்துங்கள் என கூறுகின்றன. ஆனால் இலங்கையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை இலங்கை அரசு படுகொலை செய்த போது இந்தியா உட்பட யாரும் போரை நிறுத்த சொல்லவில்லை. இலங்கையில் தமிழினத்துக்கு இந்த நாளில் இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்ததை உலகத் தமிழர்கள் எல்லாம் வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துக் கூற வேண்டும்.

விடுதலைப் போரில் ஈடுபட்ட எந்த நாடும் தோல்வி அடைந்ததாக சரித்திரம் கிடையாது. அந்த நிலை இலங்கையிலும் ஏற்படும்.விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் மீண்டும் 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பழைய பொய்யை திரும்பத் திரும்ப கூறியுள்ளனர். இந்தியா மீண்டும் மீண்டும் தவறு செய்கிறது.

டெல்லியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், ஈழத்தமிழர் பிரச்சினையில் தவறான முடிவை எடுக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், அமைப்பின் துணைத் தலைவர்கள் ராமன், சி.முருகேசன், வளர்மதி, தமிழர் நீதிக் கட்சித் தலைவர் சுப.இளவரசன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் பேசினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE