சாட்டை துரைமுருகன் கைது ‘சலசலப்பு’ முதல் புதுக்கோட்டை என்கவுன்டர் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

சாட்டை துரைமுருகன் கைது: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன், திருச்சி சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர்,திருச்சி மாவட்ட கணினிசார் குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாட்டை துரைமுருகனை 15 நாள் காவலில் அனுப்ப நீதிபதி மறுத்த நிலையில், அவர் விடுவிக்கப்பட்டார்.

சீமான் சரமாரி கேள்வி: இதனை கடுமையாக கண்டித்துள்ள சீமான், “சாராய அதிபர்கள் கையில் ஆட்சியை கொடுத்தால் சாராயத்தை எப்படி ஒழிக்க முடியும்? இவர்கள் மீது பாயாத சட்டம், மேடையில் பேசியதற்காக சாட்டை துரைமுருகன் பாய்கிறது. எதற்காக இந்த அரசு சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளது? என்னை விடவா சாட்டை துரைமுருகன் அதிகம் பேசிவிட்டார்? அதிகாரத்தில் இருக்கும் நீங்கள் என்னை கைது செய்யுங்கள் பார்ப்போம். என்னை சுற்றி இருப்பவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

தமிழர் இன அரசியல் வரலாற்றில் தீய அரசியலின் தொடக்கம் அய்யா கருணாநிதி ஆட்சிக்கு வந்தபிறகு தான். பேரறிஞர் அண்ணா வரையிலான அரசியலில் எவ்வளவு நாகரிகம், கண்ணியம் இருந்தது. கருணாநிதி வந்த பிறகு ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, அவதூறு பேச்சுக்கள், சாராயம் வந்தது. முன்னாள் முதல்வர் என்றால் அவரை பற்றி பேசவே கூடாது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரை ஸ்டாலின் பேசாததா?” என்று கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் ரகுபதி விளக்கம்: “நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு இருப்பது, தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம் சாட்டப்பட்டுகிறது. அவர், தமிழக அரசுக்கு எதிராக என்னென்ன வார்த்தைகளை பயன்படுத்தினார், அந்த வார்த்தைகள் கைது நடவடிக்கைக்கு உகந்ததா இல்லையா என்பதை படித்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். அதன்பிறகு அரசின் மீது குற்றம் சுமத்தலாம். பழிவாங்கும் நோக்கத்தோடு அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை” என்று மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.

இபிஎஸ், அண்ணாமலை கண்டனம்: “தன் கையில் இருக்கும் அதிகாரம், நிரந்தரமானது என்ற இருமாப்போடு, 'இம்' என்றால் சிறைவாசம் 'உம்' என்றால் வனவாசம் என்ற ரீதியில் வழக்குகள் போட்டு கைது செய்யும் அராஜகம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது” என்று சாட்டை துரைமுருகன் கைதுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “எதற்கெடுத்தாலும் வழக்கு தொடுத்து சாட்டை துரைமுருகனை குறிவைப்பது நன்றாக இல்லை. அவர் எந்த கட்சியைச் சார்ந்திருந்தாலும் கருத்து சுதந்திரம் உள்ளது. இதனை கண்டிக்கிறேன்.” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

“பாடம் கற்காத பாஜக அரசு” - ஸ்டாலின் விமர்சனம்: ஊரகப் பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், “தமிழகத்தில் தொடர் தோல்வியை சந்தித்த பிறகும் பாஜக தலைமையிலான மத்திய அரசு பாடம் படிக்கவில்லை. விருப்பு, வெறுப்புகளைக் கடந்து அனைவருக்குமான அரசாக செயல்பட வேண்டும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறேன். மக்களாகிய நீங்கள் எங்களுடன் இருப்பதே எங்கள் வெற்றியின் ரகசியம்” எனக் கூறினார்.

மோடி மணிப்பூருக்கு செல்ல வேண்டும்: ராகுல் - மணிப்பூரின் நிவாரண முகாம்களுக்கு தான் சென்றது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி தனது மணிப்பூர் பயணம் குறித்து 5 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“மணிப்பூரில் வன்முறை வெடித்ததில் இருந்து நான் இங்கு வருவது இது மூன்றாவது முறை துரதிருஷ்டவசமாக நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இன்றும் மாநிலம் இரண்டாக பிரிந்துள்ளது. வீடுகள் எரிகின்றன, அப்பாவி மக்களின் வாழ்க்கை அபாயத்தில் உள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிவாரண முகாம்களில் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் மணிப்பூருக்கு செல்ல வேண்டும். மக்களின் துயரங்களைக் கேட்டு, மாநிலத்தில் அமைதிக்கு வேண்டுகோள் விடுக்கவேண்டும்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 3-வது வாரத்தில் இருந்து இளநிலை நீட் கலந்தாய்வு: ஜூலை மூன்றாவது வாரத்தில் இருந்து நான்கு சுற்றுகளாக இளநிலை நீட் கலந்தாய்வு நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித்துறை மூலம் 44 பக்க பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், ‘இளநிலை நீட் கலந்தாய்வு செயல்முறை ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்கி நான்கு சுற்றுகளாக நடத்தப்படும். கலந்தாய்வு செயல்பாட்டின் போதோ அல்லது அதற்குப் பிறகோ, முறைகேடுகளில் பயனடைந்த மாணவர்கள் விண்ணப்பத்திருந்தால், அந்த விண்ணப்பம் எந்தக் கட்டத்திலும் ரத்து செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு: குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ உத்தரவாதம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது. இந்த முறை நாடு தழுவிய போராட்டங்களை மேற்கொள்வதில் நாங்கள் கவனம் செலுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை அருகே என்கவுன்டரில் ரவுடி சுட்டுக் கொலை! - திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் துரை என்ற துரைசாமி. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை கைது செய்வதற்காக திருச்சி போலீஸார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் வம்பன் யூக்கலிப்டஸ் காட்டுப்பகுதியில் துரை பதுங்கி இருப்பதாக ஆலங்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலைத் தொடர்ந்து ஆலங்குடி காவல் ஆய்வாளர் முத்தையன், உதவி ஆய்வாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கி இருந்த துரையை நெருங்கியபோது தான் வைத்திருந்த ஆயுதங்களை கொண்டு போலீஸாரிடம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதோடு, எஸ்ஐ மகாலிங்கத்தை ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போலீஸார் தற்காப்புக்காக துரையை சுட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து துரையின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பின்னர் என்கவுன்டர் நடந்த யூக்கலிப்டஸ் காட்டுப்பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் சென்று ஆய்வு செய்தார். காயம் அடைந்த எஸ்.ஐ. மகாலிங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து: நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இங்கிலாந்து. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் வாட்கின்ஸ் பதிவு செய்த லேட் கோல் அந்த அணியின் வின்னிங் கோல் ஆனது. இங்கிலாந்து அணி, ஸ்பெயின் உடன் இறுதியில் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE