காரைக்கால்: மணிப்பூரில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் நல்ல தீர்வு வரும் என்று தாம் நம்புவதாக நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இன்று காரைக்கால் வந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனை மாவட்ட ஆட்சியர் (பொ) ஜி.ஜான்சன் வரவேற்றார். பின்னர் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சென்ற அவரை கோயில் நிர்வாக அதிகாரி கு.அருணகிரிநாதன், தருமபுர ஆதீன கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து கோயிலில் அனைத்து சந்நிதிகளிலும் இல.கணேசன் வழிபாடு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எனது குடும்பம், தேசத்து மக்கள், நாடு நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்” என்றார். மணிப்பூரில் நிலவும் பிரச்சினைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஏற்கெனவே மணிப்பூர் ஆளுநராக இருந்த நான் தற்போது நாகாலாந்து ஆளுநராக உள்ளேன். மணிப்பூரில் நடப்பதை நானும் செய்திகள் வாயிலாகவே அறிந்து கொள்கிறேன். அங்கு நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு நடைபெறுகிறது. விரைவில் நல்ல தீர்வு வரவேண்டும் என பிரார்த்திக்கிறேன். விரைவில் நல்ல தீர்வு வரும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
தமிழகத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகள், தமிழகத்தில் அரங்கேறிவரும் அரசியல் கொலை சம்பவங்கள் குறித்து கேட்டதற்கு, “தமிழகத்தில் நடப்பவை குறித்து செய்திகள் வாயிலாகவே நானும் அறிகிறேன். எனினும் அதுகுறித்து கவலைப்படுவோர் கவலைப்படுவார்கள். பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்று நினைப்பவர்கள் தீர்ப்பார்கள்.
» தமிழகம் முழுவதும் 65 கோயில்களில் நாளை கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அறிவிப்பு
» சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி: கனிமொழி மாலை அணிவித்து மரியாதை!
தமிழக மக்கள் நன்றாக இருக்கவேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. என்னால் ஆண்டவனிடம் பிரார்த்தனைதான் செய்ய முடியும். தமிழக அரசியல் குறித்து முழுமையாக எனக்குத் தெரியாது. நாகாலாந்து குறித்துக் கேளுங்கள் எது வேண்டுமானாலும் சொல்கிறேன்” என்று அவர் கூறினார்