வேலூர்: திருடுபோன ரூ.34 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு!

By வ.செந்தில்குமார்

வேலூர்: செல் டிராக்கர் மற்றும் சி.இ.ஐ.ஆர் இணையதளம் மூலமாக ரூ.34 லட்சம் மதிப்பிலான 170 செல்போன்கள் கண்டறியப்பட்டு அவற்றை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஒப்படைத்தார்.

வேலூர் மாவட்டத்தில் காணாமல் போகும் செல்போன்களை கண்டறிய செல் டிராக்கர் என்ற சிஸ்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனுடன் மத்திய அரசின் சி.இ.ஐ.ஆர் என்ற இணையம் மூலமும், காணாமல் போகும் அல்லது திருடுபோகும் செல்போன்களை கண்டறியும் பணியில் சைபர் க்ரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த இரண்டு வழிகளில் வேலூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.2 கோடியே 8 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான 1,092 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செல் டிராக்கர் மற்றும் சி.இ.ஐ.ஆர் இணையதளம் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ரூ.34 லட்சம் மதிப்பிலான 170 செல்போன்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பங்கேற்று செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன், கோட்டீஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE