களப்பணியாளர்களுக்கான செல்போன் செயலி: மின்வாரிய அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்த உத்தரவு!

By எஸ்.ஆனந்த விநாயகம்

களப்பணியாளர்களுக்கான செல்போன் செயலியை அனைத்து மின்வாரிய அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் தாழ்வழுத்த மின் இணைப்பு பிரிவில் களப்பணிகளை மேற்கொள்வோருக்காக ஆண்ட்ராய்டு செல்போன் செயலி (எப்எஸ்எம்) உருவாக்கப்பட்டுள்ளது. இதில், மின் இணைப்பை துண்டித்தல், மீண்டும் இணைப்பு வழங்குதல், பழுதான மீட்டர்களை மாற்றுதல், புதிய மின் இணைப்பு வழங்குதல், மின் நுகர்வோர் அளிக்கும் புகார்கள் உள்ளிட்ட 9 சேவைகள் தொடர்பான தரவுகள், புகைப்படங்களைப் பதிவு செய்வதோடு சரிபார்க்கவும் முடியும்.

இந்தச் செயலி மூலம் களப்பணியாளர்களுக்கான பணிகளை உதவி பொறியாளர் ஒதுக்கீடு செய்ய முடியும். மேலும், மின் நுகர்வோரின் புகார்கள் சம்பந்தப்பட்ட உதவி பொறியாளருக்கு நேரடியாக சென்று சேர்ந்துவிடும். இச்செயலியை சோதனை அடிப்படையில் 88 பிரிவு அலுவலகங்களில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இச்சோதனை வெற்றி பெற்றதையடுத்து, அனைத்து அலுவலக களப்பணியாளர்களையும் செயலியை பயன்படுத்துமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் அனைத்து களப்பணியாளர்களும் இந்தச் செயலியை பயன்படுத்துவதை உறுதி செய்து, அது தொடர்பான அறிக்கையை தலைமையகத்துக்கு அனுப்பி வைக்குமாறு தொழில்நுட்ப பிரிவு தலைமை பொறியாளருக்கு பகிர்மான பிரிவு இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE