2026 சட்டப்பேரவை தேர்தலில் வலுவான கூட்டணி அமையும்: அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பழனிசாமி உறுதி

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்று நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட்டது.

ஆனால் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. அதிமுக 7 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு, 9 தொகுதிகளில் 3-ம் இடம், ஒரு தொகுதியில் 4-ம் இடம் என மோசமான நிலைக்குச் சென்றது.

பழனிசாமி தலைமையில் தொடர்ந்து 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி முகமாக இருப்பதாக ஓபிஎஸ் தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்துதொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் பழனிசாமி நேற்று முதல் 19-ம் தேதி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமைஅலுவலகத்தில் ஆலோசிக்க திட்டமிட்டிருந்தார். அதன்படி, காஞ்சி புரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில், ‘‘சட்டப்பேரவை தொகுதி அளவில் எங்கெங்கு குறைவான வாக்குகள் பதிவாயின? எந்தெந்த நிர்வாகிகள் தேர்தலில் சரியாக வேலை செய்யவில்லை? திமுகவினருடன் கைகோர்த்து, கட்சிக்கு எதிராக வேலை பார்த்ததுயார்?" என்று பழனிசாமி கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு பதிலளித்த நிர்வாகிகள் ‘‘இந்த தேர்தலில் வலுவான கூட்டணி அமையவில்லை. மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கு இலவசபேருந்து பயண வசதி போன்ற அரசின் திட்டங்களும் அதிமுக வாக்கைஇழக்க காரணம். வரும் 2026 தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து பழனிசாமிபேசும்போது, ‘‘2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். அப்பணியை கட்சி தலைமை பார்த்துக் கொள்ளும். கட்சி நிர்வாகிகள் கிளைக் கழக, மாவட்ட அளவில் மாதந்தோறும் இருமுறை கூட்டங்கள் நடத்தி கட்சியை வலுப்படுத்த வேண்டும். கட்சியில் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை’’ என்று கூறிய தாகக் கூறப்படுகிறது.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE