கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி முன்னாள் அமைச்சர் தலைமையில் மறியல் @ மதுரை

By என்.சன்னாசி

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது.

திருமங்கலம் கப்பலூரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடி விதிமுறையை மீறி செயல்பட்டு வருவதாகவும், அதை நிரந்தரமாக அகற்றக் கோரியும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 1-ம் தேதி முதல் திருமங்கலம் பகுதி உள்ளூர் வாகன உரிமையாளர்களும் கட்டணம் செலுத்த வேண்டும். வாகன ஓட்டுநர்கள் ரூ.4 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும். 50 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அண்மையில் சுங்கச்சாவடி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

இதைக் கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் மற்றும் திருமங்கலம் பகுதி மக்கள், உள்ளூர் வாகன ஓட்டுநர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நேற்று காலை சுங்கச்சாவடி பகுதியில் திரண்டு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வழியே செல்லும் அனைத்து வாகனங்களையும் மறித்ததால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.

தகவலறிந்து வந்த திருமங்கலம் கோட்டாட்சியர் சாந்தி, தேசியநெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், டிஎஸ்பி அருண் உள்ளிட்டோர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை.

இதற்கிடையே, ஆர்.பி.உதயகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்தகோட்டாட்சியர் சாந்தி அழைப்பு விடுத்தார். அதன்பேரில் கோட்டாட்சியர் அலுவலகம் சென்ற ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோருடன், இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய துணை இயக்குநர் பரத்வாஜும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து, கோட்டாட்சியர் அலுவலகம் எதிரிலும் போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, தற்காலிகமாக பொதுமக்கள் கட்டணமின்றி செல்லலாம் என்று சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்தது. எழுத்துப்பூர்வமாக உறுதி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், சுங்கச்சாவடியை ஊருக்கு வெளியே அமைக்கவேண்டும், பொதுமக்கள், வாகனஉரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்ட பல லட்சம் ரூபாய் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும், உள்ளூர் வாகனங்களை கட்டணமின்றி அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ஒப்புக்கொள்ளவில்லை.

போராட்டம் வாபஸ்: இதற்கிடையே, கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் சரக்கு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என சுங்கச்சாவடி நிர்வாகம் நேற்று மாலை உத்தரவாதம்அளித்ததால், மறியல் போராட்டம்தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும், மாவட்ட நிர்வாகத்தின் அழைப்பின்பேரில், போராட்டக் குழுவினர் மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE