நாகை மாவட்டத்தில் கோடை மழையால் 2,000 ஏக்கர் பருத்தி பயிர்கள் பாதிப்பு

By KU BUREAU

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் பெய்த கோடை மழையால் 2 ஆயிரம் ஏக்கர் அளவிலான பருத்தி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நாகை மாவட்டத்தில் நாகை, திருமருகல், கீழ்வேளூர், கீழையூர், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அதிக ஈரப்பதம் தேவையில்லை என்பதாலும், ஒருமுறை சாகுபடி செய்தால் 2 முறை அறுவடை செய்யலாம் என்பதாலும் விவசாயிகள் ஆர்வத்துடன் பருத்தியைப் பயிரிடுகின்றனர். பருத்தி சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவாகும் நிலையில், அதில் இருந்து முதல் அறுவடையில் ரூ.80 ஆயிரம் வரையும், 2-வது அறுவடையில் ரூ.50 ஆயிரம் வரையும் கிடைக்கும்.

இதில், கொள்முதல் செய்யும் நேரத்தில் நடைபெறும் ஏலத்தைப் பொறுத்து, லாபம் அதிகமாகவோ குறைவாகவோ கிடைக்கும். இந்நிலையில், தற்போது பெய்த மழையால் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பருத்தி வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பருத்திச் செடிகள் அழுகும் நிலையில் உள்ளன. அத்துடன், பருத்தி பூ மற்றும் காய்கள் உதிர்ந்து விழுந்துள்ளதால், மகசூல் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும், தமிழகத்தில் தொடர்ந்து மழைப் பொழிவு இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், பருத்திப் பயிர்கள் முற்றிலும் பாதிக்கப் படலாம் என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.எனவே, பாதிக்கப்பட்ட விளைநிலங்களை மாவட்ட நிர்வாகம் பார்வையிட்டு, உரிய ஆலோசனை, இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பருத்தி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE