திண்டுக்கல் மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை: அவசர எண்கள் அறிவிப்பு

By KU BUREAU

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்றும் (மே 19), நாளையும் (மே 20) கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பூங்கொடி காணொலி மூலம் அனைத்துத் துறை அலுவலர்களுடன் மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்ததாவது: வெள்ளத்தால் பாதிக்கும் அபாயமுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக எச்சரிக்கை அறிவிப்பு விட வேண்டும். ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட உள்ளது.

கனமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். அங்கு அத்தியாவசியப் பொருட்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். தீயணைப்பு வீரர்கள் படகு போன்ற மீட்பு பணிக்கான சாதனங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் கழிவு நீர் செல்வதற்காக தோண்டப்பட்ட குழிகளை மூட வேண்டும்.

வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்காக மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். பால் போன்ற அத்தியாவசிப் பொருட்கள் தடையின்றி விநியோகிப் பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து, கூடுதல் வாகனங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். குறிப்பாக மலைப் பகுதிகளுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் போதுமான அளவு மருந்து பொருட்களை இருப்பு வைத்திருக்க வேண்டும். மழை வெள்ளத்தில் கால்நடைகள் இறந்தால் அது குறித்த தகவல்களை கால்நடைத் துறையினர் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர் சேதம் ஏற்பட்டால் பாதிப்புகள் குறித்து வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையினர் சேத மதிப்பீடு தயார் செய்து தகவல் தெரிவிக்க வேண்டும். நீர்நிலைகளில் வெள்ளத்தை வேடிக்கை பார்க்கவோ, குளிக்கவோ குழந்தைகளை அனுமதிக்க கூடாது என பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

மழை பாதிப்பு மற்றும் மழை தொடர்பான உதவிகள் குறித்து 0451 1077, 0451 2400162, 2400163, 2400164, 2400167 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE