புல் புல் பறவை மீது அமர்ந்து பறந்தாரா சாவர்க்கர்?: புத்தக வடிவமைப்புக்குழு விளக்கமும் சர்ச்சையானது

By காமதேனு டீம்

சாவர்க்கர் சிறையில் இருந்த போது புல் புல் பறவை மீது அமர்ந்து தாய்மண்ணுக்கு வந்து சென்றார் என கர்நாடகா பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பத்தியில் உள்ள வரிகள் அழகிய புலமை நயமிக்கவை என புல் புல் பறவை கதைக்கு வலு சேர்ப்பது போல புத்தக வடிவமைப்புக்குழு தலைவர் கருத்து தெரிவித்துள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவினரால் 'வீர சாவர்க்கர்' என அழைக்கப்படும் வி.டி.சாவர்க்கர் சம்பந்தமாக இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து சர்ச்சைகள் குறைவில்லாமல் உள்ளது. சுதந்திரப்போராட்டத்தின் போது ஆங்கிலேய அரசை எதிர்க்காமல் மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொண்டிருந்தார் சாவர்க்கர் என்ற குற்றச்சாட்டை பலரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். மன்னிப்புக் கோரிய ஒருவரை எப்படி வீர அடைமொழி போட்டு அழைக்கிறீர்கள் என்று நெட்டிசன்கள் கலாய்க்காத நாளில்லை.

ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல் சாவர்க்கர் புகழ்பாடும் பணியை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் சாவர்க்கர் படத்தை வைத்து ஒவ்வொரு ஆண்டும் பாஜக தலைவர்கள் அந்த படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் 75-வது சுதந்திர தினவிழாவிற்கு கர்நாடகா அரசால் வெளியிடப்பட்ட விளம்பரங்களில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு படத்தை இருட்டடிப்பு செய்து சாவர்க்கர் படத்தை இடம் பெறச் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் மட்டுமின்றி பல்வேறு கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தன.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் 8-ம் வகுப்பு கன்னட மொழிப் பாடத்தில் சாவர்க்கர் சிறையில் இருந்தபோது புல் புல் பறவை மீது அமர்ந்து தாய்மண்ணுக்கு வந்து சென்றார் என இடம் பெற்றுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில், "அந்தமான் சிறையில் சாவர்க்கர் இருந்தபோது சிறை அறையில் சிறிய துளை கூட கிடையாது. ஆனால் அவரது அறைக்கு எப்படியோ ஒரு புல் புல் பறவை வந்து விடும். அந்த பறவையின் சிறகின் மீது அமர்ந்து தினமும் தாய் மண்ணிற்கு சாவர்க்கர் வந்து செல்வார்" என இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அந்த பாடப்பகுதியை நீக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு புத்தக வடிவமைப்பு குழுவின் தலைவர்‌ ரோஹித் சக்ரதீர்த்தா விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், "இந்த பத்தியில் உள்ள வரிகள் அழகிய புலமை நயமிக்கவை ஆகும். ஆனால் இந்த புலமை நயத்தை சிலரால் புரிந்து கொண்டு ரசிக்க தகுந்த அளவில் அறிவாற்றல் இல்லையே என்பது அதிசயமாக உள்ளது." கூறியுள்ளார்.

ஏற்கெனவே சர்ச்சையாக உள்ள பாடத்திட்டத்தை நீக்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் உள்ள கல்வியாளர்கள் கோரிக்கை எழுப்பியுள்ள நிலையில், விளக்கம் என்ற பெயரில் புத்தக வடிவமைப்புக்குழு தலைவர் சொன்னது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சை பதில் இணையங்களில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE