அரசு உதவி கோரிய மாற்றுத்திறனாளியிடம் சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டியைச் சேர்ந்தவர்கள் திருமலைக்குமார்-பாண்டீஸ்வரி தம்பதியினர். 60% மாற்றுத்திறனாளியான திருமலைக்குமார் சொந்தமாக ஊறுகாய் தயாரித்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான நான்கு சக்கர வாகனம் கிடைத்தால் தனது வேலைக்கு உதவியாக இருக்கும் என்று சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமனிடம் கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார். மனு அளித்து சுமார் 20 நாட்களுக்கு மேலாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இதுகுறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு சாத்தூர் எம்எல்ஏவிடம் பேசியுள்ளார்.
அதில், திருமலைக்குமார், "அண்ணேன், மாற்றுத்திறனாளி வாகனம் கேட்டு மனு அளித்தவன் பேசுகிறேன்" என்றதற்கு பதிலளித்த எம்எல்ஏ ரகுராமன், "நீங்க அவசரப்படுகிற மாதிரி இருந்தால் வேற ஆளைவைத்து பார்த்துக் கொள்ளுங்கள். சொல்கிறதை புரிந்துக் கொள்ளுங்கள். நான் ஒன்னும் உங்க வேலைக்காரன் கிடையாது. இன்றைய சூழலில் வேலைக்காரன் கிட்ட பேசுகிறது கூட யோசித்து பேசுகிறார்கள். நான் உங்ககூட இருந்து உதவி தான் பண்ண முடியும். அதிகாரிகள் எல்லாம் சொன்னதும் செய்ய மாட்டார்கள். உடனே பாருங்கள் என்று வேகப்படுத்தினால் முடியாது. வேற ஆளை வைத்து பார்த்துக்கொள்ளுங்கள்" என்று தட்டிக் கழிப்பது போல் பதிலளித்துள்ளார்.
இந்த ஆடியோ தற்போது வெளியாக சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விளக்கமளித்த எம்எல்ஏ ரகுராமன், மக்கள் பிரச்சினைகள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையை மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்ற எதார்த்தத்துடனே தான் இக்கருத்தை பதிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.