25 ஆண்டுகளுக்குப் பின் தூர்வாரப்படும் உதகை ஏரி : நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த அதிகாரிகள் ஆய்வு

By KU BUREAU

நீலகிரி மாவட்டம் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக இருந்து வருகிறது. இம்மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், முதுமலை, கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெளிமாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகை தருகின்றனர். உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்காவிற்கு அடுத்தபடியாக, படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த படகு இல்ல ஏரியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வகையான படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக உதகை நகரின் கழிவு நீர் முழுவதுமாக இந்த ஏரியில் வந்து கலப்பதால் ஏரியின் தண்ணீர் மிகவும் மோசமான நிலையில் மாசடைந்து காணப்படுகிறது. மேலும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஏரி தூர்வாரப்படவில்லை. இதனால் ஏரியில் மண் நிறைந்து ஆழம் குறைந்துள்ளதால், அவ்வப்போது படகு சவாரி செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

இதையடுத்து உதகை படகு இல்ல ஏரியை தூர்வாரி ஆழப்படுத்துவதோடு, அதில் கலக்கும் நகராட்சி கழிவு நீரை சுத்திகரித்து தூய்மைப்படுத்த வேண்டுமென பல ஆண்டுகளாக உதகையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நவீன தொழில்நுட்பம் மூலமாக ஏரித் தண்ணீரை தூய்மைப்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவின் பேரில், பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு இன்று உதகை படகு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டது.

முதல் கட்டமாக படகு இல்லத்தில் உள்ள தண்ணீர் மாதிரிகளை இந்த குழு பரிசோதனைக்காக சேகரித்தது. இந்த ஆய்வு முடிவுகள் கிடைத்த பின்னர், தண்ணீரில் உள்ள மாசுத்தன்மையை பொருத்து, அதற்கு ஏற்ப நவீன தொழில்நுட்பம் மூலம் ஏரியில் உள்ள தண்ணீரை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தெரிவித்துள்ளார். இதனிடையே ஏரியில் நிரம்பியுள்ள மண்ணை நவீன இயந்திரங்கள் மூலம் வெளியேற்றி ஏரியை ஆழப்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் 7.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அடுத்த 15 நாட்களில் துவங்கும் என நீர்வள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE