ஓசூர்: நாட்டின கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் உரிகம் கிளை கால்நடை மருந்தகத்தைத் தரம் உயர்த்தி, போதிய கால்நடை மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என மலைக் கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அஞ்செட்டி அருகே உரிகத்தைச் சுற்றிலும் 30-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களில் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் சார்பு தொழிலாகக் கால்நடை வளர்ப்புத் தொழில் இருந்து வருகிறது. 2 லட்சம் கால்நடைகள்: குறிப்பாக, இக்கிராமங்களில் நாட்டின மாடுகள், வெள்ளாடு, நாட்டுக் கோழிகள் என 2 லட்சத்துக்கும் கால்நடைகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இங்கு நிலவும் சீதோஷ்ண மாற்றத்தின்போது, கால்நடைகளுக்கு அடிக்கடி நோய்ப் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
நோய் பாதிப்பு ஏற்படும் கால்நடைகளை, விவசாயிகள் வாகனம் மூலம் அஞ்செட்டி மற்றும் தேன்கனிக்கோட்டையில் கால்நடை மருந்தகங்களுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இதனால், விவசாயிகளுக்குப் போக்குவரத்து செலவு அதிகம் என்பதால், பலர் தங்களுக்கு முன்னோர்கள் கற்றுக் கொடுத்த வைத்திய முறைகளைக் கால்நடைகளுக்கு பின்பற்றி வருகின்றனர்.
பாழ்பட்டு, சீராமைப்பு: இதனிடையே, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் உரிகத்தில் கிளை கால்நடை மருந்தகம் திறக்கப்பட்டது. ஆனால், கால்நடை மருத்துவர்கள் இல்லாதால் திறக்கப்பட்ட சில ஆண்டுகளில் மூடப்பட்டது. இதனால், கால்நடை கிளை மருந்தகம் பராமரிப்பின்றி பாழ்பட்டு கிடந்தது.
» கல்பாக்கம் அருகே தவறுதலாக துப்பாக்கி வெடித்து சிஐஎஸ்எப் வீரர் உயிரிழப்பு
» “விவசாயிகளுக்கான ஆழ்துளை கிணறு, மின் மோட்டார் மானியத்தை உயர்த்திடுக” - ஜி.கே.வாசன்
இந்நிலையில், விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று, மருந்தகம் சீரமைக்கப்பட்டு கடந்தாண்டு அக்டோபர் 16-ம் தேதி அவசர கதியில் திறக்கப்பட்டது. தற்போது, கால்நடை மருத்துவர் இல்லாமல் உதவியாளரைக் கொண்டு வாரத்துக்கு இரு நாட்கள் (3 மணி நேரம்) மட்டும் திறக்கப் படுகிறது. எனவே, நாட்டின கால்நடைகளைப் பாதுகாக்கும் வகையில் மருந்தகத்தைத் தரம் உயர்த்தி, நிரந்தரமாக கால்நடை மருத்துவரை நியமித்து மருந்தகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
முதலுதவி சிகிச்சை மட்டுமே.. இது தொடர்பாக அப்பகுதி விவசாயி ரங்கநாதன் கூறியதாவது: உரிகம் மலைக் கிராமத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதி விவசாயிகள் 95 சதவீதம் நாட்டின மாடுகளை வளர்த்து வருகிறோம். உரிகம் கால்நடை மருந்தகத்தில் தடுப்பூசி செலுத்துவதில்லை. மருத்துவர்களும் இருப்பதில்லை. உதவியாளர் மூலம் முதலுதவி சிகிச்சை மட்டும் அளிக்கப்படுகிறது.
கூடுதல் செலவு: எனவே, தனியார் கால்நடை மருத்துவர்களை அழைத்து வந்து நாங்கள், கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் நிலையுள்ளது. இது எங்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தி வருகிறது. நாட்டின கால்நடைகளைப் பாதுகாக்கும் வகையில் உரிகம் கால்நடை கிளை மருந்தகத்தைத் தரம் உயர்த்தி, போதிய கால்நடை மருத்துவரை நியமித்து, குறைந்தது வாரத்துக்கு 4 நாட்கள் மருந்தகம் செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.