`ஒருவர் சினிமாவின் முதல்வர்; இன்னொருவர்..!- உதயநிதி, சபரீசன் குறித்து செல்லூர் ராஜூ கமென்ட்

By மு.அஹமது அலி

"தமிழகத்தில் 52 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்து வருவதால் திமுக எங்களுக்கு பங்காளி உறவுமுறை தான்" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 30 லட்சம் மதிப்பீட்டில் மதுரை, பழங்காநத்தத்தில் உள்ள சோமசுந்தரம் பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மதுரை மாநகராட்சியின் மேயரான இந்திராணி நிதியமைச்சரின் நிழலாக செயல்படுகிறார்‌. நிதியமைச்சர் 'கீ' கொடுத்தால் மட்டுமே பொம்மை போல மேயர் செயல்படுகிறார். மதுரை மாநகராட்சியில் மேயர் எந்தவொரு பணிகளையும் செயல்படுத்தவில்லை. மதுரை மாநகராட்சி இயங்குகிறதா? இயங்கவில்லையா? என்பதே தெரியவில்லை. மதுரை மாநகராட்சி மட்டுமல்ல தமிழக அரசுமே செயல்படாத அரசாக உள்ளது.

சினிமாத் துறையின் முதல்வராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார். அவர் கையில் தான் சினிமாத்துறை உள்ளது. உதயநிதிக்கு படம் வழங்காததால் பல படங்கள் முடங்கிக் கிடக்கிறது. சபரீசன் கண் அசைவுக்காக அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் பாராட்டு விழாக்களில் மட்டுமே கலந்து கொள்கிறார். மக்களை கவனிக்கவில்லை" என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. எடப்பாடியார் தலைமையின் கீழ் அதிமுக தொண்டர்கள் உள்ளனர். திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். திமுக அரசு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதிமுக ஆட்சி காலத்தில் தான் மக்களுக்கு மறுமலர்ச்சி ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் சிங்கமாக செயல்படுவதாக கூறும் முதல்வர் ஸ்டாலின், பிரதமரை சந்திக்கும் போது பணிந்து செயல்படுகிறார். முதல்வர் விளம்பரம் தேடாமல் மக்களுக்காக சிந்தித்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் 52 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்து வருவதால் திமுக எங்களுக்கு பங்காளி உறவுமுறை தான். 2026-ல் நிச்சயம் அதிமுக ஆட்சி அமைக்கும். திமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 இடங்களைப் பிடிக்கும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE