கல்பாக்கம் அருகே தவறுதலாக துப்பாக்கி வெடித்து சிஐஎஸ்எப் வீரர் உயிரிழப்பு

By கோ.கார்த்திக்

கல்பாக்கம்: கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் இரவு பாதுகாப்பு பணி முடித்து விட்டு சிஐஎஸ்எப் வீரர்கள் இன்று (மே 19) காலை பேருந்தில் அலுவலகம் திரும்பியபோது, தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிஐஎஸ்எப் வீரர் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் அணுமின் நிலையம் மற்றும் அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள் அமைந்துள்ளன. இவற்றின் பாதுகாப்பு பணிகளில் சிஐஎஸ்எப் பிரிவை சேர்ந்த வீரர்கள் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை இரவு நேர பாதுகாப்பு பணிகளை முடித்து 40 சிஐஎஸ்எப் வீரர்கள் தலைமை அலுவலகத்துக்கு இன்று (மே 19) அதிகாலை பேருந்தில் திரும்பியதாக கூறப்படுகிறது.

அப்போது, சதுரங்கப்பட்டினம் பகுதியில் உள்ள சாலையில் பேருந்து வந்துக்கொண்டிருந்த போது, வேகத்தடையில் பேருந்து ஏறி இறங்கியதாகவும். அப்போது, துப்பாக்கியுடன் பேருந்தில் பயணித்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கமல் கிஷோர் (37) என்பவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாக கூறப்படுகிறது. இதில், எஸ்எல்ஆர் என்ற துப்பாக்கியிலிருந்து வெளியே வந்த குண்டு அவரின் கழுத்தில் பாய்ந்தது.

இச்சம்பவத்தில், காயமடைந்த கிஷோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கல்பாக்கம் போலீஸார் மற்றும் சிஐஎஸ்எப் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.கமல் கிஷோரின் உடலை மீட்டு கல்பாக்கம் நகரியப்பகுதியில் உள்ள அணுசக்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீனவர் குடியிருப்புகளில் துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டதால், அப்பகுதி வாசிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE