காங்கயம்: காங்கயம் அருகே வீடுகளின் மீது இரவு நேரத்தில் மர்மமான முறையில் கற்கள் வந்து விழுவதாக கூறி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பேய் நடமாட்டமாக இருக்கலாம் என சிலர் கிளப்பி விட்ட புரளியால் கிராம மக்கள் 13 நாட்களாக தூக்கத்தை தொலைத்துள்ளனர்.
காங்கயம் ஒட்டப்பாளையம் கிராமத்தில் உள்ள காலனி பகுதியில் 60 வீடுகளில் 200-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில் கடந்த 13 நாட்களாக இரவு 7 மணி முதல் 1 மணிக்குள் வீடுகளின் மேல் பகுதியில் கற்கள் மர்மமான முறையில் வந்து விழுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதியினர் கூறும்போது, “இங்கு வாழும் அனைவரும் திருப்பூர் மற்றும் காங்கயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் கூலி வேலைக்குச் சென்று வருபவர்கள். எங்கள் காலனி பகுதியில் இரவு நேரத்தில் மர்மமான முறையில் வீடுகளின் மீது திடீர் திடீரென கற்கள் விழுகின்றன. இதனால் நாங்கள் அச்சம் அடைந்துள்ளோம். குழந்தைகள், முதியவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒரு சிலர் பேய் நடமாட்டத்தால் இப்படி நடக்கலாம் என்று சொல்வதால் இரவில் தூக்கமின்றி தவித்து வருகிறோம். காலனி மக்கள் அனைவரும் அருகில் உள்ள கருப்பராயன் கோயிலில் தஞ்சமடைந்து இரவு நேரத்தில் தங்கி உள்ளோம். இந்நிலையில் எங்களின் அச்சத்தை போக்க போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் கடந்த 13 நாட்களாக கற்கள் விழுந்த வண்ணமே உள்ளன.
தற்போது எங்கள் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து ட்ரோன் மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது. அதேபோல் கூடுதல் விளக்குகள் பொருத்தப்பட்டு, கிரேன் வாயிலாகவும் கண்காணிக்கிறார்கள். ஆனபோதும் நேற்றிரவும் கற்கள் விழத்தான் செய்தன. இதனால் வீட்டின் ஓடு, சிமென்ட் ஷீட் மற்றும் ஆஸ்பெஸ்ட்டாஸ் ஷீட் உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளன” என்றனர்.
இந்நிலையில் மர்மமான முறையில் கற்கள் விழுவது தொடர்பாக காங்கயம் வட்டாட்சியர் மயில்சாமி நேற்று இரவு அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்தார். அது தொடர்பாக பேசிய அவர், “வீடுகளின் மேல் கல் விழும் சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பேய் உள்ளிட்ட தேவையற்ற பீதிக்கு பொதுமக்கள் ஆளாக வேண்டாம். இந்தச் செயலில் சிறுவர்கள் அல்லது இளைஞர்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் இருக்கிறது. இது தொடர்பாக விசாரித்து வருகிறோம்” என்றார்.