தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியான திருமா!

By என்.சுவாமிநாதன்

அகவை அறுபதை எட்டியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். பொதுவாழ்க்கைக் காக தனிப்பட்ட வாழ்க்கையைத் தியாகம் செய்தவர் திருமா. பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்வை ஒப்புக்கொடுத்த திருமா, அரசியலுக்காக அரசுப் பணியைத் துறந்தவர். பாஜகவின் இந்துத்துவா அரசியலுக்கு எதிராக நின்று, திமுகவுக்கு தோள்கொடுக்கும் திருமாவளவன் கடந்துவந்த அரசியல் பாதையைப் பேசுகிறது இந்தச் செய்தித்தொகுப்பு

திருமா மணிவிழாவில்...

பொதுவாக பெற்றோர் தான் பிள்ளைக்குப் பெயர் வைப்பார்கள். ஆனால் திருமா, தனது தந்தைக்கே பெயர் சூட்டிய தலைமகன். ராமசாமி - பெரியம்மாள் தம்பதியின் மூத்த மகனான இவர், தமிழ் பற்றின் காரணமாக ராமசாமி என்ற தனது தந்தையின் பெயரை தொல்காப்பியன் என மாற்றியவர். சென்னை மாநிலக் கல்லூரியில் முதுநிலை குற்றவியல் முடித்த திருமா, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமும் படித்தார். 1988-ல் படிப்பை முடித்து தடயவியல் துறையில் அறிவியல் உதவியாளராக பணியிலும் சேர்ந்தார். ஒருவேளை, அரசிலுக்குள் வராமல் இருந்திருந்தால் இந்நேரம் அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்றிருப்பார் திருமா. ஆனால், பொதுவாழ்வில் இன்னும்கூட ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்கிறார்.

“முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் என்னை அழையுங்கள். வயது அறுபதை நெருங்குகிறது. இன்னும் செய்யவேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது; அதில் கவனம்செலுத்த நேரம் வேண்டும்” என்று சிறுத்தைகளிடம் சில ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார் திருமா. ஆனாலும் அவரை விட்டு விலக மறுக்கிறார்கள் அவரது தம்பிகள். அந்த அன்பைத் தட்டமுடியாமல், அழைக்கும் இடத்துக்கெல்லாம் இன்னமும் ஓடிக்கொண்டே இருக்கிறார்.

கொடிக்கால் ஷேக் அப்துல்லா

திருமாவளவன் நாகர்கோவில் வரும்பொதெல்லாம் தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லாவை சந்திக்கத் தவறுவது இல்லை. குமரி இணைப்புப் போராட்டத் தியாகி என்பது மட்டும் காரணம் அல்ல. பட்டியல் இனத்தில் செல்லப்பாவாகப் பிறந்த கொடிக்கால் பல்வேறு சாதியச் சிக்கல்களுக்கு மத்தியில் அன்றைய காலத்தில் அரசியல், சமூகநீதி தளத்தில் இயங்கியவர். இவரைத் தேடி திருமா வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.

திருமா குறித்து கொடிக்காலிடம் பேசினோம். “இப்போதும் பசுமரத்தாணி போல் நினைவில் இருக்கிறது. அப்போது மதுரையில் அரசுப்பணியில் இருந்த திருமா, அம்பேத்கரின் துணைவியார் சபீதா மதுரையில் பாரதிய தலித் பேந்தர் இயக்கத்தைத் தொடங்கியபோது அதில் தன்னை இணைத்துக் கொண்டார். இயக்கத்தில் இயங்கிக் கொண்டே அரசுப் பணியையும் தொடர்ந்தார். 1983-ல் ஈழப்பிரச்சினை கொழுந்துவிட்டபோது அதில் முனைப்புக் காட்டினார். அந்த சமயங்களில் மதுரையில் நானும் அவரும் பலமுறை சந்தித்து மணிக்கணக்கில் பேசி இருக்கிறோம். அவரை அரசுப் பணியைத் துறந்து முழு நேர அரசியலுக்குள் உந்தித் தள்ளியதில் நானும் ஒருவன்.

காலமும் அவரை அரசியல் நோக்கித்தான் தள்ளியது. பாரதிய தலித் பேந்தர் அமைப்பின் தமிழக அமைப்பாளர் மலைச்சாமி மரணம் அடைந்ததால் 1990-ல் அந்தப் பொறுப்புக்கு வந்தார் திருமா. அதுவே பின்னாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அடித்தளமிட்டது. 1999-ல் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசுப் பணியைத் துறந்தார். நான் மட்டுமல்ல... பலரும் இதைத்தான் எதிர்பார்த்தோம். திருமா இப்போது குமரிக்கு வரும்போதெல்லாம் இதை நேரில் வந்திருந்து நினைவுகூர்வார்” என்று பெருமைபொங்கச் சொன்னார் கொடிக்கால் ஷேக் அப்துல்லா.

விடுதலை சிறுத்தைகள் கட்சியைத் திருமாவளவன் தொடங்கியபோது தேர்தல் அரசியலில் ஈடுபடப்போவது இல்லை என்ற முடிவோடுதான் களத்திற்கு வந்தார். 1990-களில் இருந்தே போராட்டம், பட்டியலின மக்களின் விடுதலை, ஈழ விடுதலைக்கான குரல் என தனது வாழ்க்கையைத் தகவமைத்துக் கொண்ட திருமாவை தேர்தல் அரசியலுக்கு இழுத்ததில் ஜி.கே.மூப்பனாரின் பங்கு அளப்பரியது.

1999-ல் மூப்பனாரின் தமாகா-வுடன் கைகோத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட திருமா, முதல் தேர்தலிலேயே லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். இதைத் தொடர்ந்து 2001-ல் திமுக கூட்டணியில் போட்டியிட்டு சட்டமன்றத்துக்குள் முதல் முறையாக அடியெடுத்துவைத்தார். 2006 தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு அணி மாறிய திருமா, 2009-ல் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆனார். ஆனால், 2011 மற்றும் 2014 தேர்தல்களில் திமுக கூட்டணியில் தோல்விகளையே அறுவடை செய்தது விசிக.

2015-ல் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக விஜயகாந்தை முன்னிறுத்தி மக்கள் நலக்கூட்டணி உருவானது. இதில் பிரதானமாக திருமாவும் இருந்தார். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தமிழகத்தில் வெற்றிக் கூட்டணியை உருவாக்குவது அத்தனை எளிதான காரியம் இல்லை என்பதை 2016 தேர்தலில் உணர்ந்து கொண்ட திருமா, மீண்டும் திமுகவை நோக்கித் திரும்பினார்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது தமிழக சட்டமன்றத்தில் தனக்கென நான்கு இடங்களைத் தக்கவைத்திருக்கிறது விசிக. மக்களவையில் திருமாவும் ரவிக்குமாரும் எம்பி-க்களாக இருக்கிறார்கள். ஆக, தமிழக அரசியலைப் பொறுத்தவரை இப்போது திருமாவும் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கிறார். அதனால் தான் திமுக தலைவர் ஸ்டாலின் அவரை விடாமல் தன்னருகே இருத்திவைக்கிறார்.

பட்டியல் இன மக்களுக்காக குரல் கொடுக்கவே அரசியலுக்கு வந்த திருமா, வடமாவட்டங்களில் பட்டியலின மக்களுக்கும் வன்னியர் சமூகத்தினருக்கும் இடையில் இணக்கமான சூழலை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கினார். அதற்காக, விமர்சனங்களைப் பற்றி எல்லாம்கூட கவலைப்படாமல் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுடன் கைகோத்தார். ஆனால், அவரது அந்த முயற்சி பலன் கொடுக்கவில்லை. அதை தனது இன மக்களும் ரசிக்கவில்லை என தெரிந்ததால் ராமதாஸின் கையை தருணம் பார்த்து உதறிவிட்டார்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுக்கு எதிராக அவர் சீற்றத்துடன் முழங்கி வருவதால் சிறுபான்மையினத்தவர் களும் அவரைத் தோழமையுடன் பார்க்கிறார்கள். இப்படி திருமா தனக்குள்ளே பல முகங்களை வைத்திருந்தாலும் பட்டியலி னத்தின் பாட்டாளி என்பதே அவரது பிரதான முகமாக இருக்கிறது. அது தான் பக்குவப்பட்ட ஓர் அரசியல் தலைவராக பொதுவெளியில் அவரைப் பரிணமிக்க வைத்துக் கொண்டிருக்கிறது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE