மயிலாடுதுறை: தரங்கம்பாடியில் சீகன்பால்கு-வுக்கு சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் அமைக்கும் பணிகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ளும் என தமிழ் சுவிசேஷ திருச்சபை (டிஇஎல்சி) பேராயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடிக்கு சீகன்பால்கு வருகை தந்ததன் 318-வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சார்பில் இன்று நடைபெற்றது. தரங்கம்பாடியில் இந்தியாவின் முதல் அச்சுக் கூடத்தை நிறுவியது, பெண்களுக்கென தனி கல்விக் கூடம் அமைத்தது, புதிய ஏற்பாட்டை தமிழில் முதன் முதலில் அச்சிட்டது உள்ளிட்ட பல்வேறு தமிழ் தொண்டுகளாற்றியவர் சீகன்பால்கு.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இவர், 1706-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் தேதி கடல் மார்க்கமாக தரங்கம்பாடிக்கு வந்தார். பின்னர் தரங்கம்பாடியில் தங்கியிருந்து பல்வேறு சமூகப்பணிகள், தமிழ் தொண்டுகளை மேற்கொண்டார். சீகன் பால்கு தரங்கம்பாடிக்கு வந்த 318-வது ஆண்டு நினைவு தினமான இன்று தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள, சீகன் பால்கு வந்து இறங்கிய இடத்தில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை 14-வது பேராயர் ஏ.கிறிஸ்டியன் சாம்ராஜ் தலைமையில், ஆயர்கள் முன்னிலையில் திருச்சபையினர் பிரார்த்தனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து சீகன்பால்குவின் நினைவுகளை போற்றும் விதமாக பாடல்களை பாடிக்கொண்டே, அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு வந்து கடற்கரைக்கு அருகில் உள்ள சீகன்பால்குவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
» ஆந்திரா மாணவர் அமெரிக்காவில் பலி: அருவியில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்
» விக்கிரவாண்டியில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் மும்முரம்
இதில் பேராயர் ஏ.கிறிஸ்டியன் சாம்ராஜ், பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன், தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவர் சுகுணசங்கரி குமரவேல் உள்ளிட்டோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சீகன்பால்கு அடக்கம் செய்யப்பட்ட புதிய எருசலேம் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
பின்னர் டிஇஎல்சி 14-வது பேராயர் ஏ.கிறிஸ்டியன் சாம்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பல்வேறு பெருமைகளை உடைய சீகன் பால்குவுக்கு தரங்கம்பாடியில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, நினைவு அரங்கம் அமைக்கப்படும் என ஜூன் 24-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சபையின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலம் எங்களின் பல நாள் கனவு, வேண்டுதல் நிறைவேறியிருக்கிறது.
தமிழக அரசு விரைவில் இதற்கான பணிகளை தொடங்கி மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நினைவரங்கம் அமைக்க ஊரின் பிரதான பகுதிகளில் உரிய அரசு இடம் கிடைக்காத பட்சத்தில், திருச்சபைக்கு சொந்தமான இடத்தை தெரிவு செய்து அளிக்கவும் தயாராக இருக்கிறோம். சீகன்பால்கு முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்து கையால் எழுதிய வேதாகம பிரதி, தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் இருந்தது.
பின்னர் அது காணாமல் போன நிலையில், லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் அந்த வேதாகம பிரதி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனை இந்தியாவுக்கு கொண்டு வந்து, தரங்கம்பாடியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீகன்பால்கு விட்டுச்சென்ற சமூகப் பணிகளை திருச்சபை தொடர்ந்து சிறப்பாக செய்யும்” என்று அவர் கூறினார்