ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான நீதிமன்ற தீர்ப்புக்கு தடை வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

By KU BUREAU

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இறந்தவர்களின் தற்கொலை தொடர்வதால், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் எக்ஸ் வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டைச் சேர்ந்த சீனிவாசன் (31) என்ற தனியார் நிதி நிறுவன ஊழியர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாலும், அதனால் கடன் வாங்கியவர்களிடம் இருந்து கிடைத்த அவமரியாதையாலும், மன உளைச்சல் அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சீனிவாசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம், ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது’ என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு பலியாகியுள்ள 8-வது உயிர் சீனிவாசன் ஆவார்.

சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததில் இருந்தே அத்தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை பெற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறேன். ஒவ்வொரு முறை ஆன்லைன் சூதாட்டத்துக்கு உயிர்கள் பலியாகும் போதும் அரசுக்கு நினைவூட்டி வருகிறேன். ஆனால், ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெறுவது தான் இப்போதுள்ள ஒரே தீர்வு ஆகும். எனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கை விரைவாக விசாரணைக்குக் கொண்டு வரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான உயர் நீதிமன்றதீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறுஅவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE