பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்: செங்கை ஆட்சியர் தகவல்

By KU BUREAU

செங்கல்பட்டு/திருவள்ளூர்: பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செங்கையில் தொடர்ந்து நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் வளர் இளம் பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் உயர்கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, இளவயது கர்ப்பத்தால் ஏற்படும் தீமைகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் வழங்கும் விதமாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, பள்ளி கல்வி துறையுடன் இணைந்து செயல்படுத்தும் ‘எனக்குள் நான்’ எனும் சிறப்பு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.

இன்றைய நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 70 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளிடம் அவர்கள் சமுதாயத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் எதிர்கால குறிக்கோள்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இம்முகாம்களில் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் மாற்றங்கள், குழந்தை திருமணம், ஊட்டச்சத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கான அரசுநலத் திட்டங்கள், சைபர் குற்றம், காவல் உதவி செயலி, போதை தடுப்பு, சுற்று சுழல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சி குறித்து மாணவ மாணவிகள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்டமுதன்மை அலுவலர் கற்பகம், மாவட்டவழங்கல் அலுவலர் சாகிதாபர்வின், மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் சங்கீதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

திருவள்ளூரில் பள்ளி மாணவியர்பங்கேற்ற ‘பெண் குழந்தைகளை காப்போம் -பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ விழிப்புணர்வு பேரணிநடைபெற்றது. இதில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுகானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பணராஜவேல், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE