கோவையில் கனமழை: மரம் விழுந்து வாகனங்கள் சேதம்; சாலைகளில் வெள்ளம்

By KU BUREAU

கோவை / பொள்ளாச்சி: கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை மதியம் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

கோவையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே தொடக்கத்தில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவியது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். இதற்கிடையே, கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோவையில் பலத்த மழை பெய்தது. அதே சமயம், இரவு மழை பெய்த சூழலுக்கு எதிர் மாறாக நேற்று காலை முதல் மதியம் வரை வழக்கமான அளவில் வெயில் நிலவியது.

இச்சூழலில், சனிக்கிழமை மதியம் வானிலை மாறியது. வெயில் குறைந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. தொடக்கத்தில் லேசான தூறலுடன் ஆரம்பித்த மழை நேரம் ஆக ஆக வெளுத்து வாங்கத் தொடங்கியது. மதியம் 3 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை சுமார் இரண்டு மணி நேரம் கனமழையாக கொட்டியது. மாலை 5 மணிக்கு பின்னர் மழையின் தாக்கம் சற்று தணிந்தது.

பீளமேடு, ஆவாரம்பாளையம், கணபதி, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், காந்திபுரம், சாயிபாபாகாலனி, ஆர்.எஸ்.புரம், வடவள்ளி உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களிலும், தொண்டாமுத்தூர், சூலூர், கருமத்தம்பட்டி என புறநகரின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சாலையோர தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. சாலைகளில் தேங்கி காணப்பட்ட மழைநீரால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனையாமல் இருக்க ‘ரெயின் கோட்’ அணிந்து சென்றனர்.

கனமழையால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை ‘ஷெட்’ சரிந்து கீழே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மீது விழுந்தது. இதில் வாகனங்கள் சேதமடைந்தன. ஆர்.எஸ்.புரத்தில் மரம் முறிந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்தது. மேலும், பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சிங்காநல்லூர், காந்திபுரம் பேருந்து நிலைய வளாகங்களில் மழை நீர் தேங்கியது. பயணிகள் மழைநீரில் நனைந்தபடி சிரமத்துடன் பேருந்துகளில் ஏறிச் சென்றனர்.

அதேபோல், பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்துக்குட்பட்ட ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் நேற்று மதியம் கனமழை பெய்தது. 9-வது வார்டுக்கு உட்பட்ட செல்வகணபதி நகர், ஜெய் கணபதி நகர், கிருஷ்ணவேணி ராஜூ நகர் பகுதியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகளில் 800-க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். மழை வெள்ளம் இங்குள்ள வீதிகளில் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. வால்பாறை மலைப் பாதையில் அட்டகட்டி அருகே 16 -வது கொண்டை ஊசி வளைவில் பாறைகள் சாலையில் சரிந்து விழுந்ததில் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE