சேலம்: மத்திய, மாநில அரசுகள் கடமையை சரியாக செய்தால், பழனிசாமி சிறைக்கு செல்வது உறுதி என பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சீமான் தற்போது தன்னிலை மாறி இபிஎஸ்-சிடம் ஆதரவு கேட்கிறார். ஜெயலலிதா பெயரை பயன்படுத்தி பாமக ஓட்டு கேட்கிறது. ‘ஜெயலலிதா ஊழல்வாதி’ என திட்டியவர்கள் தற்போது அவரது பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்கிறார்கள். அதற்கு பன்னீர்செல்வமும், பழனிசாமியும் மவுனம் காக்கின்றனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டியிட்ட தேனி ஆண்டிப்பட்டியில் அதிமுக-வுக்கு குறைந்த வாக்குகள் பதிவாகியுள்ளன. அடுத்த தேர்தலில் இரட்டை இலை சின்னமும் பறிபோய்விடும்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் வரும்: பழனிசாமி, நம்பிக்கை துரோகம் செய்வார் எனத் தெரிந்து கொள்ள, பாஜக தலைவர் அண்ணாமலைக்கு 2 ஆண்டுகள் ஆயிற்று. பிரதமர் மோடி அருகே பழனிசாமி அமரும்போதே முதுகில் எப்படி குத்த வேண்டும் என பார்த்துவிட்டார். சசிகலா செய்த தவறால், அதிமுக பழனிசாமியிடம் சிக்கி கொண்டது. சில நாட்களில் அதிமுகவில் உட்கட்சி பூசல் வரப்போகிறது.
பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் தனியாக போட்டியிட்டதில் விருப்பம் இல்லாமல் நான் வெளியே வந்தேன். மத்திய, மாநிலஅரசுகள் கடமையை சரியாக செய்தால் பழனிசாமி சிறைக்குச் செல்வது உறுதி. அப்போது, கட்சியை எளிதாக ஒருங்கிணைத்து விடுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.