எம்.பி., எம்எல்ஏ நீதிமன்றத்துக்கு குட்கா வழக்கு விசாரணை மாற்றம்: சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

By KU BUREAU

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா வழக்கு விசாரணையை எம்.பி.,எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, தடை செய்யப்பட்ட குட்காபொருட்களை தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய லஞ்சம் பெற்றது தொடர்பாக டெல்லி சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இந்த வழக்கில் ஏற்கெனவே மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் துறை அதிகாரிநவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதார துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். சென்னை சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2021-ம் ஆண்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, தமிழக முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் பலர் மீது குற்றம்சாட்டி சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த 2022 நவம்பரில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, கூடுதல்குற்றப்பத்திரிகையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து தாக்கல் செய்ய சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகை கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி எழில்வளவன் முன்புஇந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்புநீதிமன்றத்துக்கு மாற்றி, விசாரணையை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE