தாராபுரம் அருகே கோழிப் பண்ணையால் ஈக்கள் தொல்லை: பாதிப்பை உணர்த்த ஈக்களுடன் வந்த கிராம மக்கள்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: தாராபுரம் அருகே கோழிப் பண்ணையால் தாங்கள் படும் ஈக்கள் தொந்தரவை சுட்டிக்காட்டும் வகையில், ஈக்களை பிடித்து வந்த கிராம மக்கள் பாதிப்பை அதிகாரிகளுக்கு உணர்த்தினர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் இன்று (ஜூலை 8) நடந்தது. அப்போது பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர். அதில், தாராபுரம் அருகே சின்னக்காம்பாளையம் கிராம மக்களின் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஈக்களை பாட்டிலில் எடுத்து வந்து ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் அமைந்துள்ள தனியார் கோழிப்பண்ணையால், சுகாதாரம் கெட்டுள்ளது. அருகிலுள்ள வீடுகளில் எந்த நேரமும் ஈக்கள் மொய்க்கின்றன. இதனால் உணவுப் பண்டங்கள் உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்படுகிறது. அதிகப்படியாக படையெடுக்கும் காது, மூக்கு வழியாக உடலுக்குள் செல்கின்றன. நிம்மதியாக வீட்டில் பகல்நேரங்களில் கூட இருக்க முடிவதில்லை. சாப்பிடும் தட்டுகளில் ஈக்கள் மொய்ப்பதால், குழந்தைகள் உட்பட பலரின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

சோளம், கத்தரி, தக்காளி, வாழை, தென்னை மற்றும் மல்பரி செடிகளின் பூக்களை, ஈக்கள் மொய்த்து பாதிப்பு ஏற்படுத்துகின்றன. அருகில் உள்ள சின்னப்புத்தூர், கோவிந்தாபுரம் கிராமங்களில் கோழிப்பண்ணைகள் இருப்பதால் 1 கி.மீ. நீளத்துக்கு ஈக்கள் தொந்தரவால் பாதிக்கப் பட்டுள்ளோம். இது நீடிக்கும் பட்சத்தில், சுமார் 15 கிராமங்கள் வரை பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். இது தொடர்பாக தாராபுரம் கோட்டாட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே மாவட்ட ஆட்சியர் பல நூறு குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சுகாதார விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மனுவில் கூறியுள்ளனர்.

இதேபோல் கரைப்புதூர் ஊராட்சி லட்சுமி நகர் மற்றும் அபிராமி நகர் பொதுமக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 150 குடும்பங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதி பின்னலாடை சார்ந்த தொழில் நிறைந்த பகுதி. ஆனால், கடந்த சில வாரங்களாக எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் இளஞ்சிவப்பு நிறத்தில் வருகிறது.

மாசடைந்த நிலத்தடி நீரை பயன்படுத்துவதால் குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் உட்பட பலரும் உடல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரி இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE