புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒருநபர் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

By KU BUREAU

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்த வந்த நிலையில், மத்திய அரசால் அவை “பாரதிய நியாய சன்ஹிதா, 2023”, “பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023” மற்றும் “பாரதிய சாக்‌ஷியா சட்டம், 2023” என மாற்றப்பட்டு, ஜூலை 1 முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையினரின் கருத்தினைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தப் புதிய சட்டங்களில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதை எடுத்துக்கூறி தமிழக முதல்வர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் இப்புதிய சட்டங்களில் என்னென்ன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்று (ஜூலை 8) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில், இந்தப் புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உட்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்பதை ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைத்திட, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழுவினை அமைத்திட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இக்குழு இந்தப் புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, மாநில அளவில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் அரசுக்கு வழங்கும்.இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் , தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர், தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், பொதுத் துறைச் செயலாளர், சட்டத்துறை செயலாளர், காவல்துறை இயக்குநர் மற்றும் அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE