மூளையைத் தாக்கும் அமீபா குறித்து பதற்றம் வேண்டாம்: சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

By KU BUREAU

சென்னை: அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதால், மூளையைத் தாக்கும் அமீபா குறித்து பொதுமக்கள் பதற்றமடைய தேவையில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் அமீபா நுண்ணியிரியால் மூளை அழற்சி பாதிப்பு ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 14 வயது சிறுவன் ஒருவனும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேரளா முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை தொடர்ந்து, அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சுகாதாரமற்ற தண்ணீரில் குளிக்கும்போது சுவாசப்பாதை வழியே ஊடுருவிச் செல்லும் அமீபா, நேரடியாக மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி, மனக்குழப்பம், பிதற்றல், வலிப்பு போன்ற அறிகுறிகள் இதனால் ஏற்படும். எனவே, பொதுமக்கள் இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க, தேங்கிய நீரிலோ அசுத்தமான, மாசடைந்த நீரிலோ குளிக்கக் கூடாது என அறிவுறுத்துமாறு சுகாதாரத் துறை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

மேலும், குளம், ஏரி போன்ற நீர்நிலைகளை தூய்மையாக இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூளையைத் தாக்கும் அமீபா குறித்த செய்திகள் காரணமாக பொதுமக்களிடையே பரவலாக அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “அமீபா பரவாமல் தடுக்க தேவையான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே, அமீபா நுண்ணுயிரி குறித்து பதற்றம் வேண்டாம். சென்னையில் செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் உரிமம் பெற வேண்டும். வரும் 10ம் தேதி முதல் தெரு நாய்களை கணக்கெடுக்கும பணி துவங்க உள்ளது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE