அமைச்சர் உதயநிதி பிரச்சார கூட்டத்திற்காக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் கடும் அவதி!

By KU BUREAU

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் விக்கிரவாண்டியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.

இந்நிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து நேற்று மாலை திருவாமாத்தூர், காணை, பனமலைப்பேட்டை, அன்னியூர் ஆகிய கிராமங்களில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குகள் சேகரித்தார்.

இன்று தும்பூர், நேமூர் கிராமங்களில் அமைச்சர் உதயநிதி வாக்கு சேகரிக்க உள்ளார். இதையொட்டி திமுகவினர் பிரச்சார கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். இன்று காலை 9 மணி முதல் செஞ்சி மற்றும் வேலூர் செல்லும் பேருந்துகள் பூத்தமேடு பகுதியில் நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதியில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்.

இதை ஊடகங்கள் படமெடுத்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்வது செஞ்சி- விழுப்புரம் சாலை என்பதால் அவர் இரு இடங்களில் பிரச்சாரம் முடிக்க குறைந்த பட்சம் பிற்பகல் 1மணி ஆகும் என்பதால் மீண்டும் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று அந்த பகுதி மக்கள் புலம்பியபடியே சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE