கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(33). இவர் தன் தாய் கல்யாணியுடன் பல ஆண்டுகளாக வசித்து வந்த குடிசை வீடு இருக்கும் இடம் அரசுக்குச் சொந்தமான வண்டிப் பாதை வகையைச் சேர்ந்தது என, வருவாய்த் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ராஜ்குமார் வீட்டின் பின்பகுதியில் உள்ள வீட்டு மனைகளுக்குச் சென்று வர வழியில்லாததால், பாதையை ஆக்கிரமித்துள்ள ராஜ்குமாரின் குடிசை வீட்டை அகற்றி வழி ஏற்படுத்த வருவாய்த் துறையினர் முடிவு செய்தனர். அதற்காக முன்னறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்ட பிறகும், அவ்விடத்தை விட்டு ராஜ்குமார் வெளியேற வில்லை.
இந்நிலையில், கடந்த 4-ம் தேதி காலை வருவாய்த் துறை அதிகாரிகள், போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினருடன் ராஜ்குமார் வீட்டை அகற்ற பொக்லைன் இயந்திரத்துடன் சென்றனர். அப்போது, மின் இணைப்பைத் துண்டித்த வருவாய்த் துறையினரிடம் வீட்டை அகற்ற ராஜ்குமார் கால அவகாசம் கேட்டார். அதற்கு வருவாய்த் துறையினர் மறுத்துவிட்டனர்.
உடனே ராஜ்குமார் பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளித்தார். உடலில் 85 சதவீதம் தீக்காயமடைந்த ராஜ்குமார், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.
» விம்பிள்டன் டென்னிஸ்: ஸ்வியாடெக் தோல்வி
» பாமக பிரமுகரை வெட்டிய 5 பேர் கைது: முன்விரோதத்தால் தாக்குதல் நடத்தியதாக தகவல்
தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று காலை ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து, கும்மிடிப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, ராஜ்குமார் வீட்டை வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த 4-ம் தேதியே பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.
மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்த இச்சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி கிராம நிர்வாக அலுவலர் பாக்யஷர்மா ஆகிய 3 பேரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பணியிடமாற்றம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.