தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை வாய்ப்பு

By KU BUREAU

சென்னை: நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூர், கோவை மாவட்டம் சின்னக்கல்லார் ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகி உள்ளது.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 9 முதல் 13-ம் தேதி வரை ஒருசில இடங்களில் 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை மற்றும் இரவு வேளையில், இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 11-ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE