சேலம் ரயில்வே கோட்டத்துக்கு சரக்கு போக்குவரத்தில் 3 மாதத்தில் ரூ.70.30 கோடி வருவாய் 

By எஸ்.விஜயகுமார்

சேலம்: சேலம் ரயில்வே கோட்டமானது, கடந்த 3 மாதங்களில் 6.97 லட்சம் டன் சரக்குகளை, ரயில்கள் மூலமாக உரிய இடங்களுக்கு கொண்டு சேர்த்து ரூ.70.30 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. பார்சல் போக்குவரத்திலும் சேலம் ரயில்வே கோட்டம் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டமானது, சரக்கு ரயில் போக்குவரத்து, பார்சல் ரயில் போக்குவரத்து ஆகியவற்றில், மற்ற ரயில்வே கோட்டங்களுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்று வருகிறது.

சரக்கு போக்குவரத்து: அதன்படி, முடிவுற்ற காலாண்டில் (ஏப்ரல்- ஜூன்), சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட இடங்களில் இருந்து சரக்கு ரயில்கள் மூலமாக பெட்ரோலியப் பொருட்கள், சிமெண்ட், இரும்பு மற்றும் எஃகு தளவாடப் பொருட்கள் ஆகியவற்றை நாட்டின் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கோவை உள்பட சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து பொறியியல் துறை சார்ந்த உற்பத்தி பொருட்கள், மாவரைக்கும் கிரைண்டர்கள், மோட்டார்கள் உள்பட பல்வேறு பொருட்கள் பார்சல்களாக, பாதுகாப்பான முறையில் மஹாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம், அசாம் உள்பட பல மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதன்படி, முடிவுற்ற காலாண்டில் 6.97 லட்சம் டன் சரக்குகளை, ரயில்கள் மூலமாக உரிய இடங்களுக்கு கொண்டு சேர்த்துள்ளது. இதன் மூலம் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு ரூ.70.30 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

பார்சல் போக்குவரத்து: சரக்கு ரயில் போக்குவரத்தில் பெற்றுள்ள வளர்ச்சியைப் போல, பார்சல் போக்குவரத்திலும் சேலம் ரயில்வே கோட்டம் சாதனை நிகழ்த்தியுள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தில் போத்தனூர், கோவை ஜங்ஷன், கோவை வடக்கு, வாஞ்சிபாளையம், திருப்பூர், ஊத்துக்குளி, ஈரோடு, சேலம், மேட்டுப்பாளையம், கரூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து, அதிக பார்சல்கள் அனுப்பப்பட்டன.

பார்சல்களில் கைத்தறி ஆடைகள், பருத்தி ஆடைகள், பழங்கள், காய்கறிகள், பால் உற்பத்தி பொருட்கள், முட்டை போன்றவை, பார்சல்களாக சரயில்களில் அனுப்பப்பட்டன. இதன்படி, முடிவுற்ற காலாண்டு காலத்தில், 1.26 லட்சம் குவிண்டால் சரக்குகளை, பார்சல்களாக, நாட்டின் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சேர்த்தது. இதன் மூலம் ரூ.4.87 கோடி (கடந்த ஆண்டு ரூ.4.62 லட்சம்) வருவாயை ஈட்டியுள்ளது.

குறிப்பாக, கடந்த ஆண்டு சேலம் ரயில்வே கோட்டமானது, இதே காலகட்டத்தில் 1.03 லட்சம் குவிண்டால் பார்சல்களை ரயில்களை அனுப்பியிருந்தது. இதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சேலம் ரயில்வே கோட்டம் 22.51 சதவீதம் அதிக பார்சல்களை கையாண்டு, 5.37 சதவீதம் கூடுதல் வருவாயை பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE