சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்தினார். இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்து வந்தவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங். சென்னை, பெரம்பூரில் வசித்து வந்த இவரை நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக இதுவரை 11 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் நேற்று இரவு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் நள்ளிரவு 12.50 மணியளவில் அயனாவரம் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் பெரம்பூர் பந்தர்கார்டன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி இன்று காலை 10.50 மணி அளவில் பெரம்பூர் பந்தர்கார்டன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் மகளை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
» கும்மிடிப்பூண்டியில் வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த இளைஞர் மரணம்
» ஜம்மு காஷ்மீரில் பதற்றம்: 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்; 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் மாயாவதி கூறியதாவது, “தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியை மிகுந்த அர்பணிப்புடன் வளர்த்தவர் ஆம்ஸ்ட்ராங். புத்தர் காட்டிய மனிதாபிமான் வழியில் பயணித்தவர். அவரது மரணம் என்பது தமிழ்நாட்டில் உள்ள தலித்துகளுக்கு ஒரு பேரிழப்பு. அவரது இறப்பை கேட்டு நான் மிகுந்த வேதனையடைந்தேன்.
தமிழிநாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். மேலும் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நியாயம் அளிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்