கும்மிடிப்பூண்டியில் வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த இளைஞர் மரணம்

By KU BUREAU

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கோட்டக்கரையில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது இளைஞர் ராஜ்குமார் தீக்குளித்தார். இவரது வீடு ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கடந்த 4-ஆம் தேதி ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர்.

அப்போது ராஜ்குமார் திடீரென வீட்டிற்குள் சென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். உடனடியாக காவல் துறையினர் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து அருகில் இருந்த கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர்.

இதன்பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 85% தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த 3 நாட்களாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

முன்னதாக, ராஜ்குமார் தீக்குளிப்பு சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் ஆக்கிரமிப்பை அகற்றும் விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய ஷர்மா ஆகிய மூவரை பணியிட மாற்றம் செய்தும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE