`இந்தச் சட்டம் இருந்தால் திமுக அரசு மாற்றப்பட்டிருக்கும்'- சொல்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

By மு.அஹமது அலி

திமுக அரசின் வீட்டுவரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசி உள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

மதுரை பழங்காநத்தம் வடக்குத்தெருவில் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பொதுமக்கள், அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, "மின் கட்டண உயர்வால் திமுக அரசு தமிழக மக்களைக் கசக்கிப் பிழிகிறது. இந்த அரசு சொன்னது எதையுமே நிறைவேற்றவில்லை. ஒன்று இரண்டை நிறைவேற்றிவிட்டதாக அமைச்சர்கள் சொல்கிறார்கள். பொய் சொல்லி மக்களை ஏமாற்றி உள்ளனர். நாங்கள் குறை சொன்னால் எதிர்க்கட்சி காழ்ப்புணர்ச்சியால் பேசுகிறார்கள் எனக் கூறுகின்றனர். மக்களே சொல்கின்றனர் திமுக அரசு எதுவும் செய்யவில்லையென்று.

வீட்டுவரி உயர்வு, மின் கட்டண உயர்வால் மக்கள் கொதித்துப் போய் உள்ளனர். திமுக அரசு எதையுமே செய்யாமல் வாக்களித்த மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த ஆட்சி பிடிக்கவில்லை வேறு ஆட்சியை மாற்றிக்கொள்ளலாம் என சட்டம் இருந்தால் திமுக அரசு மாற்றப்பட்டு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி மக்களால் கொண்டு வரப்படும். அப்படி ஒரு வாய்ப்பு இல்லையே என மக்கள் ஏங்கிக்கொண்டுள்ளனர்.

திமுக ஆட்சியில் ஒரு கொடுமை சென்றால் இன்னொரு கொடுமை வருகிறது. இந்த ஆட்சி அமைந்ததில் இருந்தே மக்கள் பயத்தில் உள்ளனர். பயத்தில் உள்ள மக்களுக்கு பூஸ்ட்டாக ஏதாவது கொடுக்க வேண்டும். ஆனால், துன்பத்தையும், துயரத்தையும் மட்டுமே கொடுக்கும் வகையில் அரசு செயல்படுகிறது. திமுக ஆட்சியில் சட்டம். ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது. மாணவிகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. தொழிலதிபர்கள் சந்தோஷமாக இல்லை.

ஒன்றிய அரசு, ஒன்றிய அரசு என எப்போதும் மத்திய அரசைக் குறை சொல்லி, எங்களை அடிமை அரசு எனக்கூறி தற்போது திமுக அரசு, அடிமை அரசாக உள்ளது. கேட்டால் திராவிட மாடல் அரசு எனச்சொல்வது கேலிக்கூத்தாக உள்ளது. மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் என்றால், தற்போதைய ஆட்சியில் மின்சார கட்டணத்தைப் பார்த்தாலே ஷாக் அடிக்கிறது.

கள்ளக்குறிச்சி சம்பவம் ஒரு மோசமான விபத்து. ஸ்ரீமதி விவகாரத்தில் வேகமாக எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. பள்ளி நிர்வாகம் மீது தவறில்லை என காலையில், டிஜிபி கூறிவிட்டு மாலையில் 3 பேரை கைது செய்கிறார். ஆட்சியர், எஸ்.பியை நீக்கம் செய்கிறார்கள். தும்பை விட்டு வாலை பிடிக்கும் அரசாக உள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒரு சமூகத்தை விட்டு நீக்கியவருக்கு பதிலாக அதே சமூகத்தை சேர்ந்தவருக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆர்.பி. உதயகுமாருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த சமுதாயம் ஏமாறக்கூடாது என்ற அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கலாம்.

உதயகுமார் சிறப்பாக பணியாற்றக்கூடியவர், கொடுத்த பணிகளை சிறப்பாக செய்பவர், நல்ல சட்டமன்ற உறுப்பினர், தென் மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார் எதிர்க்கட்சி துணைத்தலைவரானது பெருமை அளிக்கிறது. மேலும், அதிமுக எப்போதும் சாதி மத இன பாகுபாடு பார்க்காத கட்சி. அதிமுக ஒன்றாகத்தான் உள்ளது. தொண்டர்கள், நிர்வாகிகள் ஒன்றாகத்தான் உள்ளோம்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE