சென்னை மெட்ரோ அப்டேட்: நாதமுனி - கொளத்தூர் வழித்தடத்தில் டிசம்பரில் சுரங்கப்பாதை பணிகள் தொடக்கம்

By மு.வேல்சங்கர்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், நாதமுனி - கொளத்தூர் வரையிலான 5 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள் டிசம்பரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான (44.6 கி.மீ) 5-வது வழித்தடமும் ஒன்றாகும்.

இத்தடத்தில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் 39 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும், 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன. இதற்காக பல்வேறு இடங்களில் தூண்கள் அமைக்கப்பட்டு உயர்மட்டப் பாதைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

சுரங்கப்பாதையை பொறுத்தவரை, கொளத்தூர் முதல் நாதமுனி வரையிலான 5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட உள்ளது. தற்போது, ஆரம்பக்கட்டபணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை வரும் டிசம்பரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது, ‘இந்த சுரங்கப்பாதை பணிகள் முடிவடைய 3 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொளத்தூர் சந்திப்பு, சீனிவாசா நகர், வில்லிவாக்கம் மெட்ரோ, வில்லிவாக்கம் பேருந்து நிலையம் மற்றும் நாதமுனி ஆகிய ரயில் நிலையங்கள் சுரங்கப்பாதை மூலம் இணைக்கப்பட உள்ளது.

இந்தத் தடத்தில் வில்லிவாக்கம், நாதமுனி உள்பட பல இடங்களில் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், சுரங்கப்பாதை ரயில் நிலையப் பணிகளும் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. இங்கு சுரங்கப்பாதை பணிகளை வரும் டிசம்பரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் அடுத்தடுத்து பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன’ இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE