நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயில் விருதுநகரிலும் நின்று செல்ல வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

By இ.மணிகண்டன்

விருதுநகர்: நாகர்கோவிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் விருதுநகரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருதுநகர் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி நாடு முழுவதும் 9 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் திருநெல்வேலி - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயிலையும் பிரதமர் மோடி அப்போது துவக்கி வைத்தார். திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படும் வந்தேபாரத் சிறப்பு ரயில் வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் 3 நாள்கள் இயக்கப்பட்டு வருகிறது, இந்த ரயில் விருதுநகரில் நின்று செல்கிறது.

இதனால், வியாபாரம், வேலை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சென்னை சென்று வருவோருக்கு இந்த ரயில் வரப்பிரசாதமாக உள்ளது. இந்நிலையில், சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் மேலும் ஒரு வந்தே பாரத் சிறப்பு ரயில் ஜூலை 11-ம் தேதி முதல் இயக்கப்படவிருக்கிறது. வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வாரத்தில் 4 நாட்கள் இந்த வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

ஆனால், இச்சிறப்பு ரயில் விருதுநகரில் நிறுத்தம் இல்லாமல் கோவில்பட்டியில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 11-ம் தேதி முதல் சென்னை- நாகர்கோவில் இடையே இயக்கப்படவிருக்கும் வந்தேபாரத் சிறப்பு ரயிலும் விருதுநகரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகளும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் க.ஜெயசங்கர் நம்மிடம் பேசுகையில், “தெற்கு ரயில்வே அதிகப்படியான நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இம்மாதம் 11-ம் தேதி முதல் சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் வரையும், மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூர் வரையும் வந்தே பாரத் சிறப்பு ரயிலை இயக்க திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம், விருதுநகர் நிறுத்தத்தை தவிர்ப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை.

மாவட்டத்தின் தலைநகரையே தவிர்ப்பது மிகவும் தவறான செயல். அதுமட்டுமில்லாமல், தென்மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் விருதுநகர் உட்பட சிவகாசி, ராஜபாளையம் போன்ற சிறந்த தொழில்நகரங்களை உள்ளடக்கியது. தினமும் ஆயிரக்கணக்கோர் தொழில் நிமித்தமாக இங்கிருந்து சென்னை சென்றுவரும் நிலையில், விருதுநகர் ரயில் நிலையம் மிகவும் முக்கியமானதாகப் பயன்பாட்டில் உள்ளது‌. அத்துடன் விருதுநகர் நிறுத்தத்தை தவிர்க்கும் பட்சத்தில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் போன்ற பகுதிகளில் இருந்து செல்வோர் மதுரை ரயில்நிலையம் தான் செல்ல வேண்டும் என்பதால் மிகப்பெரிய சிரமத்திற்கு உள்ளாவர்.

சிறப்பு ரயில் என்பது அனைத்துப் பகுதி மக்களுக்கும் சிறப்பான சேவையைத் தர வேண்டுமே தவிர, சிரமத்தைத் தரக்கூடாது. தெற்கு ரயில்வேயின் இத்திட்டம் ஒரு மாவட்டத்தையே வஞ்சிப்பதுபோல் உள்ளது. எனவே, விருதுநகர் நிறுத்தத்தையும் உள்ளடக்கி வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE